"இந்த வீரரை அறிந்திருக்கிறீர்களா?” “சட்டிக் கொட்டு சாமுவேல்… தூத்துக்குடியின் மறக்கப்பட்ட தியாகி”
தூத்துக்குடி மாவட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான தியாகி “சட்டிக் கொட்டு சாமுவேல்” இவரின் நினைவுச் சின்னம் இன்று பராமரிப்பின்றி காணப்படும் நிலை..
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவிலுள்ள இலட்சுமி புரத்தில் (மெஞ்ஞானபுரம் அருகே) காளை பெருமாள் குடும்பத்தில் அதாவது, அருமை நாயகம் - மாணிக்கம் அம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 1894இல் பிறந்தவர் தான் இந்த சாமுவேல் நாடார்.
சிறுவயதில் பெற்றோரை இழந்த சாமுவேல் நாடார் தூத்துக்குடியிலிருந்த அவரது உறவினர் வீட்டில் தங்கி, ஆங்கிலேயரின் நூற்பாலையில் பணி புரிந்து வந்துள்ளார்.. காந்தியின் மீது கொண்ட அன்பால் காங்கிரசுப் பேரியக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்று அந்நியத்துணி எரிப்பு, கள்ளுக்கடை மறியல் போன்ற போராட்டங்களில் பங்கேற்றார்.
பின்னர், கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டபோது கடை முதலாளியின் ஆட்களால் தாக்கப்பட்டு பின்னர், காங்கிரசு இயக்கத்தின் கூட்டம் ஒன்றில் பேசியபோது கத்திக்குத்துக்கு உள்ளாகி அப்போதும் குடிக்காதீர்கள், என முழக்கமிட்டவர் தான் இந்த சாமுவேல் நாடார்.
இன்றைய மாநகராட்சி கிழக்கு மண்டலம் அலுவலகம் முன் (அன்றைய நாளில் மைதானம்) கொடியேற்றும் போராட்டம் அறிவிக்கப்பட்டதாம்.. அப்போது, காவல்துறையினரின் கண்களில் சிக்காமல் தப்பித்து, குறிப்பிட்ட நாளில் கொடியை ஏற்றிய பெருமையும் இவரை சாரும்..
அது மட்டுமா, பஞ்சாலைத் தொழிலாளர் நலனுக்காகவும் உழைத்த இவர் கழுத்தில் இரும்புச் சட்டியை மாட்டியிருந்ததால், 'சட்டிக் கொட்டு சாமுவேல்' என அழைக்கப்பட்டார். பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில் தூத்துக்குடி சட்டமன்ற (1958) உறுப்பினராக இருந்த இவர் 29.07.1959இல் பாத யாத்திரையாக வந்த பூதானத் தொண்டர்களை வரவேற்று அழைத்து வருகையில் (இரயில் நிலைய இரண்டாம் கேட் அருகே) மாரடைப்பால் மரணமடைந்தார்.
26.07.1960ல் அவ்விடத்தில் நினைவுச் சின்னம் இவருக்கு எழுப்பப்பட்டு அன்றைய மாநில அமைச்சர் வெங்கட்ராமன் திறந்து வைத்துள்ளார். நாட்டின் விடுதலைக்காகச் சிறைவாழ்வு ஏற்ற சாமுவேல் நாடார் இறுதிவரை நாட்டுக்காகவே வாழ்ந்தார்.. இவரின் நினைவுச் சின்னம் தற்போது கேட்பாரற்று போஸ்டர் ஒட்டும் சுவர் போல மாறியுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சமூகத்தின் வரலாறு அதன் தியாகிகளை மறக்காமல் நினைவு கூர்வதில் தான் உள்ளது. தியாகியின் வீரத்தையும் தியாக உணர்வையும் எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் முக்கிய அடையாளமாக தான் நினைவு சின்னம் வைக்கப்படுகிறது. ஆனால் தற்போது தியாகி “சட்டிக் கொட்டு சாமுவேல்” அவர்களின் நினைவுச் சின்னம் பராமரிப்பின்றி வெறும் போஸ்டர் ஒட்டும் தூணாக மாறி இருப்பதை என்னவென்று சொல்வது...
ஆகவே, நினைவுச் சின்னத்தை பாதுகாத்து வரலாற்று தியாகிகளை பள்ளி, கல்லூரிகளில் எடுத்துச் சொல்ல வேண்டும், தூத்துக்குடியின் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது..
செய்தியாளர் : மு.மணிகண்டன்