13ம் நுாற்றாண்டு கல் சிற்பம் துாத்துக்குடியில் கண்டெடுப்பு.
13th century stone sculpture discovered in Tuticorin.
துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே சுடுகாட்டுப் பகுதியில் 13ம் நுாற்றாண்டை சேர்ந்த கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துாத்துக்குடியை சேர்ந்த தொல்லியர் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி, ஓட்டப்பிடாரம் தாலுகா, பட்டினமருதுார் பகுதியில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். அவரது அறிக்கை அடிப்படையில் விரைவில் தொல்லியல் துறை சார்பில் ஆய்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ராஜேஷ் செல்வரதி கூறியதாவது:
ஓட்டப்பிடாரம் தாலுகா, சுண்டன்பச்சேரி கிராமத்தின் தென்பகுதியில் காணப்படும் மயான தளத்தின் பின்புறத்தில், சிதைவடைந்த நிலையில் மணல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் ஆன கட்டட துாண்கள் காணப்பட்டன.
தலைகீழாக கிடந்த 20 அங்குலம் உயரமும், 15 அங்குலம் அகலமும் கொண்ட ஓர் கருங்கல் மிகவும் வித்தியாசமான மற்றும் தனித்துவமானதாக இருந்தது.
ஒரே பீடத்தில் அருகருகே அம்மையும், அப்பனும் அமர்ந்து அருள் பாலிக்கும் அம்சம் கொண்ட தெய்வ திருமேனிகளின் அமைப்பு என தெரியவந்தது.
இருவரின் வலது கைகளில் ஆயுதம் ஏந்தியவாறும், இருவரின் இடது கையும் அவரவர் இடது தொடையில் வைத்தது போன்று உள்ளது.
அப்பனின் வலது பாதமும், அன்னையின் இடது பாதமும் பீடத்தை விட்டு வெளியே வடிவமைப்பு செய்யப்பட்ட நிலையில் உள்ளது.
13 முதல் 15ம் நுாற்றாண்டின் காலகட்டத்தை சேர்ந்ததாக கருதலாம். இருவரின் அமைப்பும் குலசேகரன்பட்டினம் ஞான மூர்த்தீஸ்வரர் மற்றும் முத்தாரம்மன் போன்றும், கொண்டை அமைப்பை காணும்போது கள்ளழகர், லட்சுமி போன்றும் உள்ளது.
இதுதொடர்பான தகவல்கள் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கும், தமிழக தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.