“முயல் வேகத்தில் திமுக… ஆமை வேகத்தில் அதிமுக… GPS வைத்து தேடும் நிலையில் நாம் தமிழர்!”
தூத்துக்குடி: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.
ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த முறை 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, அமைப்பு ரீதியான பணிகளை வேகமாக முன்னெடுத்து வருகிறது. மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டங்கள், வாக்குச்சாவடி திட்டமிடல்கள், நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு ஆகியவை தேர்தல் ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது.
மறுபக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – பாரதிய ஜனதா கட்சி கூட்டணி, ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற நோக்கில் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அரசியல் சூழ்நிலையில், கடலோர பகுதியான தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் கட்சி செயல்பாடுகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.
பெரும்பாலான கட்சிகள் தங்கள் அடிப்படை பணிகளை வேகமாக முன்னெடுத்து செல்லும் நிலையில், “அதிமுக எங்கே?” என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தற்போது ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.
தொகுதியில் திமுக தீவிரத் திட்டமிடலுடன் களம் இறங்கியுள்ள நிலையில், அதிமுகவின் களப்பணி கண்களுக்கு தென்படாதிருப்பது அரசியல் ஆர்வலர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், “வேகமா? அல்லது அமைதியா?” என்ற அரசியல் நிலை தான்..
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம், இந்த முறை “மூன்றாவது முறையாக தொகுதியை கைப்பற்ற வேண்டும்” என்ற இலக்குடன் கட்சி அமைப்பு ரீதியான தேர்தல் பணிகளை முழு வேகத்தில் முன்னெடுத்து வருகிறது. பாக முகவர்கள் கூட்டம், வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை, நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் என கட்டமைப்பு அடிப்படையிலான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அடுத்த கட்டமாக, வீடு தோறும் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பு பணியும் தீவிரமடைந்துள்ளது.
ஆனால், சில இடங்களில் “எழுதி கொடுத்தோம்… தொகை வரவில்லை” என்ற குறைபாடுகள் எழுந்து, பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கும் சம்பவங்களும் உள்ளன. இருந்தாலும், திமுகவின் தரைமட்டச் செயல்பாடுகள் வேகத்தை குறைக்காமல் தொடர்கின்றன.
மறுபக்கம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தரப்பில் அதே அளவிலான களப்பணிகள் இல்லை என்பது அரசியல் வட்டாரங்களின் கருத்தாக உள்ளது. “முயல் வேகத்தில் திமுக ஓடினால், ஆமை வேகத்தில் அதிமுக நடக்கிறது” என சிலர் நையாண்டி செய்கின்றனர். அதுவும் போதாது, அந்த ஆமை கூட இன்னும் start ஆகலையே!” என அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி அதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கும் “முருகன்” பெயரை கொண்ட நிர்வாகி இதுவரை முழுமையான தேர்தல் பணிகளைத் தொடங்கவில்லை என்பது உள்ளூர் அரசியல் வட்டாரங்களின் பேச்சு., சமீபத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்த “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டங்கள் செயல்படுத்துவோம்” என்ற கருத்தை எடுத்துரைக்கும் வகையில், தூத்துக்குடி சிவன் கோவிலை சுற்றியுள்ள வணிகர்களை சந்தித்தும், அது போக ஒரு சில இடங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.. அது மட்டும் தான்., சரி இவராவது ஆன்மிக பூமி எனக் கூறப்படும் அந்த "ஸ்ரீ" தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படாலும் தூத்துக்குடியில், “செல்லமான பெயர்” கொண்ட முன்னாள் அமைச்சர் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. தூத்துக்குடியில் வெற்றி பெற்று அமைச்சரான இவர், இந்த முறை தொகுதியில் தீவிரமாக களம் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், தரைமட்டச் செயல்பாடுகள் ஒன்றுமே இல்லை...
“ஒருவேளை கூட்டணி கட்சிக்கு சீட் ஒதுக்கினால்? அல்லது வாரிசு ஒருவரை வேட்பாளராக அறிவித்தால்?” என்ற அரசியல் கணக்கு அவர் மனதில் திறக்கப்பட்டுள்ளதாம். "வடை போச்சே” என்பதற்கு பதில் “பணம் போச்சே” என்று புலம்ப வேண்டாம் என்பதற்காக அமைதியாக உள்ளாராம்.. சில தினங்களுக்கு முன்பு, அந்த ‘செல்லப் பெயர்’ கொண்ட தலைவர் செய்தியாளர் சந்திப்பில், "தூத்துக்குடியில் கண்டிப்பாக அதிமுக தான் போட்டியிடும் வெற்றி நிச்சயம்”என்று உறுதியாக தெரிவித்தார். "கூறுவது எளிது… செயலில் காட்டினால்தானே வெற்றி கைக்கு வரும்..
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக தரப்பில் கூட தெரு முனைப் பிரச்சாரம் என அடிப்படை அரசியல் பணிகளை செய்து வருகிறது. அது போக, 2026 தேர்தல் களத்தில் புதிய முகமாக களம் இறங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கூட வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அடுத்ததாக நாம் தமிழர் கட்சி. இந்த கட்சி தூத்துக்குடியில் இருப்பதே தெரியவில்லை என்பது தான் முக்கிய அம்சம். நீங்கள் கேட்கலாம்., கடந்த “இரு தினங்களுக்கு முன்பு தானே வேட்பாளர்கள் அறிவித்தார்கள்; பிரச்சாரம் எப்படிச் செய்வது?” என்று. ஆனால் அது இங்கே பொருந்தாத கேள்வி..
ஆம், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளரை நான்கு மாதங்களுக்கு முன்பே கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்து விட்டார். “இந்த இளைஞர்தான் நிற்கப் போகிறார்” என்று தெளிவாக கூறப்பட்டு விட்டது. அப்படி இருக்க நாம் தமிழர் கட்சியாவது தூத்துக்குடியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கலாமே.. ஆக, இந்த வேட்பாளரை GPS கூட கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருக்கிறாரா? என்ற நகைச்சுவை விமர்சனங்கள் உலாவுகின்றன.
மொத்தத்தில் பார்க்கும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் முயல் வேகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆமை வேகம், நாம் தமிழர் கட்சி சிக்னல் தேடும் நிலை. என்பதே ஊரறிந்த அரசியல் உண்மை..
தேர்தலுக்கு இன்னும் சிறிது காலமே உள்ள நிலையில், “வாக்குறுதி வெல்லுமா? அல்லது வாக்காளர் வாசல் வெல்லுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தியாளர் மு.மணிகண்டன்