தூத்துக்குடியில், லிப்ட் கேட்ட குற்றவாளி… போலீஸாரிடமே மாட்டிக் கொண்ட கதை!

தூத்துக்குடியில், லிப்ட் கேட்ட குற்றவாளி… போலீஸாரிடமே மாட்டிக் கொண்ட கதை!

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட் பகுதியில் நேற்று நடந்த ஒரு சம்பவம் மக்கள் மத்தியில் சிரிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிவஜோதி நகர் பகுதியில் வசித்து வரும் சிவகமலா (43) என்பவர் வீட்டிற்குள் நேற்று ஒரு மர்ம நபர் நுழைந்து, கத்தியால் மிரட்டி அவருடைய கழுத்தில் இருந்த சுமார் 7 பவுன் தாலி செயினை அறுத்து கொண்டு தப்பிக்க முயன்றான்.

ஆனால், “என்னை எளிதாக ஏமாற்ற முடியாது!” என்ற மாதிரி தைரியம் காட்டிய சிவகமலா, அந்த நபரின் கையை கடித்து காயம் ஏற்படுத்தினார். இருந்தாலும் அந்த நபர் செயினை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டான்.

இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும், போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இங்கே தான் கதைக்கு திருப்பம்.,

கையில் கடிபட்ட காயத்துடன் ஓடி வந்த அந்த நபர், வழியில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். ஆனால் அவர் யார் தெரியுமா? விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் பிரேம்குமார்! 

சந்தேகம் அடைந்த அதிகாரி உடனே விசாரிக்க, கையில் இருந்த கடி காயமும் போலீஸ் குரூப்பில் வந்த புகைப்படமும் ஒத்துப்போனது. உடனே மற்ற போலீசாரை அழைத்து அந்த நபரை பிடித்தனர்.

விசாரணையில் அவர் தூத்துக்குடி டிஎம்பி காலனி சேர்ந்த சசிகுமார் (30) என்பதும் தெரிய வந்தது. திருடப்பட்ட தாலி செயினும் அவரிடமிருந்து மீட்கப்பட்டது. பின்னர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சசிகுமார் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

திருடி ஓடியவன்… லிப்ட் கேட்டு போலீசாரிடமே மாட்டிக்கொண்டது தான் காமெடியோ காமெடி...