அரசு நிகழ்ச்சியில் திமுக விளாத்திகுளம் எம்.எல்.ஏ திடீர் வெளியேற்றம், – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!

அரசு நிகழ்ச்சியில் திமுக விளாத்திகுளம் எம்.எல்.ஏ திடீர் வெளியேற்றம், – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!

தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற “உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டத்தின் நிறைவு விழாவை முன்னிட்டு “கனவுகள் மெய்ப்படும்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் காணொளி மூலம் ஒளிபரப்பாகியது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தூத்துக்குடி மாவட்டத்திற்கான Vision 2030 தொலைநோக்கு திட்டப் புத்தகத்தை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். 

நிகழ்வில், தூத்துக்குடி மேயர் ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், நிகழ்ச்சி தொடக்கத்தில் மேடையில் அமர்ந்திருந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், முதலமைச்சரின் நிகழ்ச்சி காணொளி ஒளிபரப்பு தொடங்கிய சில நிமிடங்களிலேயே திடீரென மேடையை விட்டு எழுந்து வெளியேறி காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்..

ஒரு முக்கிய அரசு நிகழ்ச்சியில், அதுவும் முதலமைச்சர் தொடர்புடைய நிகழ்ச்சி ஒளிபரப்பின் போது ஒரு சட்டமன்ற உறுப்பினர் திடீரென வெளியேறிய சம்பவம் அங்கு கலந்து கொண்டவர்களிடையே ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

எம்.எல்.ஏ எதற்காக வெளியேறினார் என்ற தகவல் இல்லை. “அவசர வேலையா? அல்லது வேறு ஏதேனும் அரசியல் பின்னணியா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.