ஸ்ரீவைகுண்டம் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது.. வேட்பாளர்களுக்கான போட்டி தீவிரம்.!
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் கூட்டணி கட்சியான பாஜக? அதிமுக? போட்டியிட மும்முரம்., இறுதியில் யாருக்கு வாய்ப்பு அதிகம்.!
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி, 1957-ஆம் ஆண்டு உருவான தமிழ்நாட்டின் பழமையான தொகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆன்மீகத்திலும் வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொகுதி, 108 வைணவ திவ்ய தேசங்களில் உள்ள 9 நவதிருப்பதி ஸ்தலங்களை உள்ளடக்கிய புனித பூமியாக விளங்குகிறது. வறண்டுபோகாத ஜீவநதியான தாமிரபரணி நதி பாய்ந்தோடும் இந்த பகுதி, தொல்லியல் முக்கியத்துவம் பெற்ற ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற உலகப் புகழ்பெற்ற தளங்களையும் கொண்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் தேர்தல் அரசியல், கட்சிகளின் கூட்டணி அமைப்புகளையும் உள்ளூர் பிரச்சினைகளையும் பொறுத்து மாறுபட்டு வருகிறது. 1957 முதல் 2021 வரை நடைபெற்ற 14 சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் – 7 முறை, அதிமுக – 5 முறை, திமுக – 2 முறை வெற்றி பெற்றுள்ளன. இதனால் இந்த தொகுதியில் காங்கிரஸ் மற்றும் அதிமுகவின் பாரம்பரிய ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது.
2006 தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ து.செல்வராஜ் காலமானதை அடுத்து 2009-ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும், எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.
இதனால் காங்கிரஸ் வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டி, தேமுதிக மற்றும் பாஜக வேட்பாளர்களுடன் போட்டியிட்டு சுமார் 60% வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இது தொகுதியில் காங்கிரஸின் செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தியது. பின்னர், 2011, 2016ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட சண்முகநாதன் தொடர்ந்து இரு முறை வெற்றி பெற்றார்.
பின்னர், 2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ், அதிமுக வேட்பாளர் சண்முகநாதனை 17,372 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இருப்பினும், அண்மைக்காலங்களில் பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளும் தொகுதியில் தங்களது இருப்பை வலுப்படுத்த முயன்றன.. கடந்த 2023ல் அதிமுக–பாஜக கூட்டணி பிளவு ஏற்பட்ட போது உற்சாகமாக வெடி, வெடித்து கொண்டாடியவர் தான் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன்.. அப்போதே பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை குறிவைத்தார். சாத்தான்குளம் அருகே பள்ளக்குறிச்சியை சேர்ந்த இவர், தொகுதியில் மக்கள் பணிகளில் கடுமையாக ஈடுபட்டு வந்தார். பின்னர் அதிமுக–பாஜக கூட்டணி மீண்டும் அமைந்தபின், தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியானதால் பாஜகவின் செயல்பாடுகளில் மந்தம் ஏற்பட்டது..
ஆனால், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, “ஸ்ரீவைகுண்டம் தொகுதி பாஜகவுக்கே” என்ற உறுதியான பேச்சும் எழுந்தது. ஆனால் தற்போது பாஜகவிற்கு சீட் கிடைக்காமல் அதிமுகவே களம் காணும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் பாஜகவினர் கடும் அப்சட்., அதுமட்டுமல்ல, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பெரிதாக கட்சி பணியாற்றவில்லை என்பதால் சண்முகநாதனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இல்லை என்ற கருத்தும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது. தொகுதியில் போதிய அளவில் கட்சி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற விமர்சனங்களும், தற்போதைய அரசியல் சூழலும் அவரது வாய்ப்பை பாதிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் சார்பில் மீண்டும் ஊர்வசி அமிர்தராஜ் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் தொகுதியில் திட்டங்களை கொண்டு வரவில்லை, பெரும்பாலும் சென்னையில் மட்டுமே இருக்கின்றார், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் அவரது கட்சியினரிடமே எதிர்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. (முன்னதாக இந்த செய்தி குறித்து துப்பறிதல் செய்தி தளத்தில் முழுமையாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.) இதனால் உட்கட்சி பூசல்கள் வெற்றியை பாதிக்கலாம் என்ற கணிப்பும் உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி, கட்சி பெயரை விட வேட்பாளரின் செல்வாக்கும், மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகளும் நிறைவேறும் நிலையும் முக்கிய காரணிகளாக அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை என்றே கூறலாம்..
இதனால், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் இறுதியாக எந்த கட்சி சார்பில் யார் வேட்பாளராக களம் காணப்போகிறார்கள், மேலும் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களும் பொதுமக்களும் ஆவலுடன் பொறுத்திருந்து பார்க்கும் நிலைமை உருவாகியுள்ளது.
செய்தியாளர் மு.மணிகண்டன்