தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் தீ விபத்து.!
தூத்துக்குடி: தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மின் நிலையம் ஐந்து அலகுகள் மூலம் சுமார் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. கடந்த ஆண்டு முதல் மற்றும் இரண்டாவது அலகுகளில் ஏற்பட்ட தீ விபத்தால் அவை முற்றிலும் சேதமடைந்தன. தற்போது அவற்றில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மின் உற்பத்தி தொடங்காத நிலையில், மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது அலகுகள் மூலம் 630 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், துறைமுகப் பகுதியில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படும் நிலக்கரி கையாளும் பகுதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ, அருகில் உள்ள ‘செகண்டரி கிரஷர்’ எனப்படும் நிலக்கரி அரைக்கும் பகுதிக்கும் பரவியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி தீயணைப்பு துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து சுமார் நான்கு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கன்வேயர் பெல்ட் மற்றும் நிலக்கரி அரைக்கும் பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சேத மதிப்பை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெர்மல் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக இத்தகைய தீ விபத்துகள் ஏற்பட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் சேதமடைவது குறித்து பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. இது அதிகாரிகளின் அலட்சியமா அல்லது நிர்வாக குறைபாடுகளா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
செய்தியாளர் மு.மணிகண்டன்