Thupparithal
ஆன்மிகம்

பிரமாண்டமாகிறது திருச்செந்தூர் கோவில் வளாகம்: ரூ.300 கோடியில் மேம்படுத்த முடிவு…

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் முருகன் கோவிலில், பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், தரிசன முறைகளை எளிமையாக்கவும், 300 கோடி ரூபாய் செலவில், பிரமாண்டமான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

மேலும், கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, இரண்டாண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகம், மாசி விழா, கந்த சஷ்டி விழா, தேரோட்டங்கள் என, ஆண்டு முழுதும் விழாக்கோலம் காண்கிறது.

இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால், பக்தர்களின் பங்களிப்பின்றி கோவில் வளாகத்தில் விழா எளிமையாக நடந்தது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவில், வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திரண்டனர்.

திருச்செந்துார் கந்த சஷ்டி விழாவில், ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள் உள்ளிட்ட அதிகாரிகள் இரவு, பகலாக திருச்செந்துாரில் தங்கி பணிகளை மேற்கொண்டனர்.

கோவிலில் பெருந்திட்ட பணிகள் துவங்கி இருப்பதால், கோவில் பிரகாரத்தில் விரதம் இருக்க இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, பக்தர்களுக்கு, 18 கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. வழக்கத்தை விட அதிகமான எண்ணிக்கையில் கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

கோவில் வளாகத்திலும், பிரகாரத்திலும் ஆக்கிரமித்திருந்த நுாற்றுக்கணக்கான கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, வேறு தனி இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நெருக்கடியின்றி வந்து போக முடிகிறது. கடற்கரை முழுதும் பக்தர்களிடையே நெருக்கடி, தள்ளுமுள்ளு ஏற்படாத வண்ணம், கட்டைகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

தனியார் அன்னதான கூடங்களின் அருகில் பக்தர்கள் சாப்பிட்டு விட்டு வீசும் தட்டுகள், இலைகளை அப்புறப்படுத்த துாய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். கடற்கரையில் மட்டுமின்றி, கோவில் வளாகத்திலும் பக்தர்கள் கூடியிருந்த இடங்களிலும் சூரசம்ஹார காட்சியைக் காண எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

விழா சிறப்பாக நடப்பதற்காக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளுடன் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டார். திருநெல்வேலி டி.ஐ.ஜி., பிரவேஷ் குமார், எஸ்.பி., சரவணன், துாத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணன் தலைமையில், 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள், இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் முருக பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

எனவே, கோவில் வளாகத்தில் இன்னும் சிறப்பாக வசதிகள் ஏற்படுத்தி தருவதற்காக, பெருந்திட்ட பணிகள் துவங்கியுள்ளன. இதற்கு திருச்செந்துார் பகுதியைச் சேர்ந்த எச்.சி.எல்., கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் சிவ் நாடார், தன், ‘வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனம் சார்பில், 200 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். ஹிந்து சமய அறநிலையத் துறை நிதி, 100 கோடி ரூபாய் சேர்த்து மொத்தம், 300 கோடி ரூபாயில் பல்வேறு திட்ட பணிகள் நடக்க உள்ளன.

திருச்செந்துார் கோவிலில் தரிசனம் மேற்கொள்ள, 100 ரூபாய் கட்டணம், தர்ம தரிசனம் என, இரண்டு வரிசைகள் உள்ளன. இரண்டிலுமே பக்தர்கள் அதிகம் வருகின்றனர்.

பக்தர்கள் கால் கடுக்க நிற்க வேண்டி இருப்பதால், தற்போதுள்ள கலையரங்கம் துவங்கி வள்ளி குகை நுழைவு அருகே சென்று கோவில்வாசல் வரையிலும் இடது புறமாக அமர்ந்து வரிசையில் செல்லும் ஹால் கட்டப்பட உள்ளது.

அதில் உட்கார்ந்து செல்லும் வகையிலும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்படுகின்றன. இதனால், பக்தர்கள் மன உளைச்சல் இன்றி முருகப்பெருமானை பொறுமையாக தரிசிக்க முடியும்.

முன்பு திருச்செந்துார் கோவிலில், மற்ற கோவில்களை போல தினமும் சுமார், 400 பேர் மட்டுமே மதிய அன்னதானம் பெற்றனர். தற்போது காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது.

அரிசி சாதம், சாம்பார், இரண்டு வகை கூட்டு, ரசம், மோர் என ஒரு நபருக்கு, 45 ரூபாய் மதிப்பில் சாப்பாடு வழங்கப்படுகிறது. தினமும், 4,000 – 5,000 பேர் வரையும், விழா நாட்களில், 6,000 பேரும் அன்னதானம் சாப்பிடுகின்றனர்.

இதற்காக தினமும், 1 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படுகிறது. அன்னதான திட்டத்தில் ஏழை எளியவர் மட்டுமின்றி, வசதியானவர்களும் பயன் பெறுகின்றனர். இதற்காக, 60 பேர் சமையல், பரிமாறும் பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

ஊழியர்களின் மாத ஊதியமாக, 7 லட்சம் ரூபாய் செலவாகிறது. புதிய திட்டத்தின்படி அன்னதானக் கூடம் கோவில் அருகில் தரைத்தளம், முதல் தளத்துடன் ஒரே நேரத்தில், 1,000 பேர் உணவருந்தும் வகையில் பிரமாண்ட கட்டடமாக கட்டப்பட உள்ளது. கோவிலில் நடக்கும் சிறப்பான திட்டங்களில் அன்னதானமும் ஒன்றாகும். ஆனால், அன்னதானத்திற்குரிய நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

திருச்செந்துார் பெருந்திட்ட பணிகளில், கடற்கரை பகுதியில் தற்போதுள்ள நாழிக்கிணறு செல்லும் ஓடுகள் வேய்ந்த பாதை அகற்றப்படுகிறது. அதுவரையிலும் கடற்கரையை இன்னும் விரிவுபடுத்த திட்டம் உள்ளது.

நாழிக்கிணறு செல்லும் பாதையும், நாழிக்கிணறும் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட உள்ளன. அதே பகுதியில் அறுபடை வீடுகளில் மற்ற ஐந்து படை வீடு கோவில்களின் மாதிரி ஏற்படுத்தி, பக்தர்களை வழிபட செய்யும் திட்டமும் உள்ளது.

திருச்செந்துாருக்கு வந்தால் அறுபடை வீடுகளையும் தரிசித்த திருப்தி ஏற்படும். பக்தர்கள் தங்குவதற்காக தற்போது, 150 அறைகளுடன் யாத்ரிகர் நிவாஸ் எனும் புதிய தங்கும் வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

கோவில் அருகில் இரண்டு இடங்களில் அதிக எண்ணிக்கையில் கார்கள், வாகனங்கள் நிறுத்துவதற்கான வளாகமும் ஏற்படுத்தப்படுகிறது.

கோவிலுக்கு எதிர்புறம் கடற்கரைக்கு மேல்புறம் நாழிக்கிணறுக்கு தென்மேற்கில் புதிதாக இரண்டு திருமண மண்டபங்கள் கட்டப்பட உள்ளன. அதே பகுதியில் பிரசாதங்களான பஞ்சாமிர்தம், திருநீறு தயாரிக்கும் மையங்கள் புதிதாக கட்டப்பட உள்ளன.

திருச்செந்துார் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அலுவலகம், வரவேற்பு அலுவலகம் என, புதிய அலுவலக கட்டட வளாகமும் அமைகிறது. புதிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டங்கள், கோவில் யானைக்கு தங்கும் வளாகம் போன்ற புதிய திட்டங்களும் உள்ளன.

திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, 20 கோடி ரூபாய் மதிப்பில் கோவில் கோபுரம், சிதிலமடைந்த சுதை சிற்பங்கள் சீரமைப்பு, கடற்கரை முகப்பு, கோவில் உட்பகுதியில் குளிர்சாதன வசதி உள்ளிட்ட புரைமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இரண்டு ஆண்டுகளில் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.

திருச்செந்துார் கோவிலில் மாதந்தோறும் இரண்டு முறை உண்டியல்கள் எண்ணப்படுகின்றன. மாதந்தோறும், 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானம் வருகிறது. விழா நாட்களில் வருமானம் இன்னமும் அதிகரிக்கிறது.

திருச்செந்துார் கோவிலில் புதிய கட்டுமான பணிகளால், கோவில் வளாகம் இன்னும் அழகுறவும், பக்தர்களுக்கு பயனுள்ளதாகவும் மாறப்போகிறது.

உள் விரதம் இனி அனுமதியில்லை!

ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவின் போது, கோவில் உள்பிரகாரத்தில், 400 பேர் விரதம் இருக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு புதிய பணிகள் நடப்பதால், அங்கு விரதம் இருக்க அனுமதிக்கப்படவில்லை.

வரும் ஆண்டுகளிலும் கோவில் பிரகாரத்தினுள் விரதம் இருக்க அனுமதிக்கக் கூடாது என, பக்தர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக, 400 பேர் விரதம் இருப்பதாக கூறினாலும் அங்கு, 800க்கும் மேற்பட்டோர் தங்குகின்றனர்.

அவர்கள் இரவு நேரத்தில் வெளியே வந்து செல்வதும், இயற்கை உபாதை, நீராடிய பிறகு ஈரத்துணிகளை, உள்ளாடைகளை கோவிலுக்கு உள்ளாகவே உலர்த்துதல் என, கோவில் வளாகம் பாழ்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவில் வளாகத்தின் வெளியே விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களை போலவே அந்த, 400 பேரும் கோவிலுக்கு வெளியே விரதம் இருக்கலாமே என்கின்றனர் முருக பக்தர்கள்.

இக்கோவிலில் நான்கு மாதங்களுக்கு மேலாக தங்கத்தேர் ஓடவில்லை. ஒரு நாள் தங்கத்தேர் வீதி உலா மூலம் கோவிலுக்கு கணிசமான வருமானம் இருந்தது.

எனவே, பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கந்த சஷ்டியின் போது, தங்கத்தேரோட்டத்தையும் நடத்திக் காட்டினார் அமைச்சர் சேகர்பாபு.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி உள்ளிட்ட எல்லா விழாக்களிலும் அனைத்து செலவுகளையும் உபயதாரர்கள் தான் கவனித்துக் கொள்கின்றனர். எனவே, முருகப்பெருமான் மீது நம்பிக்கை கொண்டு வரும் உபயதாரர்களை கொண்டே விழாக்களை சிறப்பாக நடத்த முடியும்.

Related posts

தூத்துக்குடி சிவன்கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 216 சிவலிங்க பூஜை நடைபெற்றது.

Admin

கோவில்பட்டி புற்று கோவிலில் ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை – பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Admin

தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அமைச்சர், மேயர், கலெக்டர், எஸ்.பி, ஆணையர், முன்னாள் அமைச்சர், பங்கேற்பு!.

Admin

Leave a Comment

error: Content is protected !!