இந்திய அரசியல் சட்டச் சிற்பி அம்பேத்கர் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு உள்ள அம்பேத்கர் திருவருட்சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவிக்க வந்தனர். அப்போது அங்கே ஏற்கனவே அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் மதவாத கருத்துக்கள், மதவாத சக்திகளை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்று கோஷம் எழுப்பினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் “பெரியார் ஒழிக” என்று கோஷங்களை எழுப்பியதால் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி பாஜகவினர் “பெரியார் ஒழிக” என்று குரல் எழுப்பிய நிலையில், அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் “பெரியார் வாழ்க” என்று குரல் எழுப்பினர்.
இதற்கிடையில் அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதித்தனர். ஆனால் மாலை அணிவித்த பின்னர் சிலையிலிருந்து கீழே இறங்காமல் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் ஆத்திரம் அடைந்த பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இரு தரப்பினர் மத்தியில் நிலவிய இந்த வாழ்க, ஒழிக கோஷத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.