தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுக பெண் கவுன்சிலர் பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு 16-வது வார்டு திமுக கவுன்சிலர் பிரம்மசக்தி மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மற்ற நபர்கள்யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில். திமுக கவுன்சிலர் பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்தார்.
அறிவிப்பை தொடர்ந்து மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ஆர்.அனிதா ராதாகிருஷ்ணன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மொத்தம் உள்ள 17 கவுன்சிலர்களில் திமுக கவுன்சிலர்கள் 15 பேர் பிரம்மசக்திக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். தூத்துக்குடி மாவட்ட முன்னாள் சேர்மன் சத்யா உள்ளிட்ட 2 அதிமுக உறுப்பினர்கள் தேர்தலை புறங்கணித்தனர்.
முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. தலைவர் பதவி பொது பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நடந்த மறைமுகத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஆர்.சத்யா தலைவராகவும், முள்ளக்காடு செல்வக்குமார் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த ஆண்டு திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் பலரும் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவராக இருந்த சத்யா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், 15 உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
தலைவர் சத்யாவும், அவருக்கு ஆதரவான உறுப்பினர் ஒருவரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யாவுக்கு எதிரான தீர்மானம் உறுதி செய்யப்பட்டதால் அவர் தலைவர் பதவியை இழந்தார். இதன் தொடர்ச்சியாக திமுக மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கரின் மனைவியான 16-வது வார்டு கவுன்சிலர் பிரம்மசக்தி புதிய மாவட்ட ஊராட்சி தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரம்மசக்திக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகைய்யா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார்,ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, மற்றும் கட்சியின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.