தூத்துக்குடி மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் தூத்துக்குடி ட்ரையல்ப்ளேசர்ஸ் ரோட்டரி சங்கம், ஹோலிகிராஸ் மனையியல் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், அழகர் பள்ளி இன்டராக்ட் சங்கம், சக்தி விநாயகர் பள்ளி இன்டராக்ட் சங்கம், கிட்டீஸ் வேர்ல்ட் பள்ளி கிண்டராக்ட் சங்கம் இணைந்து குறுங்காடு வளர்க்கும் திட்டத்தை தொடங்கினார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட தருவைக்குளம் உரக்கிடங்கு வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி ட்ரையல்ப்ளேசர்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் மலர்விழி தலைமை வகித்தார். சங்கத்தின் பட்டயத் தலைவர் டாக்டர் பிளோரா முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் மலர்விழி வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ நகர தூய்மைக்கான உறுதிமொழி வாசிக்க கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து எடுப்பதில் மாநகராட்சிக்கு உள்ள சிரமங்களை மாணவர்களிடம் எடுத்துக்கூறி தங்கள் வீடுகளில் குப்பைகளை பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குப்பைகள் உருவாவதற்கு காரணமான மக்கள் தான் அந்த குப்பைக்கு பொறுப்பேற்று சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் பசுமையாகவும் மாற்ற உறுதியெடுக்க வேண்டும் எனவும் அவர் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார். பின்னர் குறுங்காடு அமைக்கும் திட்டத்தின் முதல் பகுதியை மரக்கன்று நட்டி திட்டத்தை தொடங்கிவைத்தார். தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் மரக்கன்றுகளை நட்டினார்கள்.
3212 ரோட்டரி மாவட்டத்தின் குறுங்காடு உருவாக்கும் திட்டமான திம்மக்கா திட்டத்தின் மாவட்ட தலைவர் விஜயகுமாரி, இன்டராக்ட் மாவட்ட தலைவர் காயத்ரி, உதவி ஆளுநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், ரோட்டரி சங்க முன்னாள் உதவி ஆளுநர் பாலமுருகன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வக்கீல் சொர்ணலதா, பிரேமா, தனம்ராதா, மதுரவள்ளி, கீதா மற்றும் பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ட்ரையல்ப்ளேசர்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து செய்தனர்.