தூத்துக்குடி மாநகராட்சி கூட்டரங்கத்தில் இன்று வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பது பற்றியும் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைக்கும் பணியினை துரிதப்படுத்தும் விதமாக மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ தலைமையில் வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பணி முன்னேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆய்வு கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் எனவும் இம்மாத இறுதிக்குள் நூறு சதவீத இலக்கினை எட்டும் வகையில் பணியாற்றிட வேண்டும் என களப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, வட்டாட்சியர் செல்வக்குமார், மற்றும் தேர்தல் பணி தொடர்பான துறை சார்ந்த அலுவலர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.