திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவின்போது கோவில் வளாகத்திற்குள் ”பக்தர்கள் தங்கி இருந்து விரதம் இருக்க விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு உடனடியாக தகர்த்து முருக பக்தர்கள் வழக்கம்போல விரதம் இருக்க அனுமதி வழங்கிடவேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து, அம்மனுவில் கூறியுள்ளதாவது; தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார திருவிழா பாரம்பரிய சிறப்புடன் பக்தர்களால் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி இந்தாண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா வரும் 25.10.2022ம் தேதி துவங்கி 31.10.2022ம் தேதி வரை நடக்கிறது. பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளில் இருந்தே கந்த சஷ்டி விரத காலம் துவங்கி விடும். இதனால், தீபாவளி பண்டிகை அன்று இரவிலே வெளியூர்கள், வெளிமாவட்டங்களில் இருந்து முருக பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து கோவிலின் உள்ளே உள்ள பிரகாரங்களில் இடம் பிடித்து அங்கேயே 6நாட்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொள்வது வழக்கமாகும்.
காலகாலமாக பாரம்பரியம்மிக்க வகையில் முருக பக்தர்களின் இந்த கந்த சஷ்டி விரத வழிபாடுகள் தவறாமல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலகையே உலுக்கிய கொடிய கொரோனா நோய் தாக்கத்தால் கடந்த இரண்டு வருட காலமாக கந்த சஷ்டி விரத வழிபாடுகள் சரியான முறையில் நடைபெறவில்லை. கந்த சஷ்டி வழிபாடுகளுக்கு வந்த பக்தர்கள் பல்வேறு விதிமுறைகள் அடிப்படையிலேயே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இத்தகையசூழ்நிலையில் கொடிய கொரோனா நோய் தாக்கமானது முற்றிலுமாக குறைந்து மக்கள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளனர். இதனால், அனைத்து மத ஆலயங்களிலும் மத வழிபாடுகள், திருவிழாக்கள் பாரம்பரியமான முறையில் எந்தவிதமான விதிமுறைகளும் இல்லாமல் வழக்கம்போல நடைபெற்று வருகிறது.
இதனஅடிப்படையில், இந்த வருடம் கந்த சஷ்டி திருவிழா, சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வழிபாடுகள் பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்புடன் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில், இந்த வருடம் கந்த சஷ்டி திருவிழா விரதம் மேற்கொள்ள வரும் பக்தர்கள் கோவில் உள்ளேயுள்ள பிரகாரங்கள் மற்றும் கோவில் வளாகத்தில் எங்கும் தங்கியிருந்து விரதம் இருக்கக்கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் திடீரென அதிரடியாக தடை விதித்துள்ளது.
இது சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் மத்தியில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்துக்கள் மத்தியிலும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சமீபகாலமாக அரங்கேறி வரும் பல்வேறு நிகழ்வுகள் இந்துக்களுக்கு விரோதமானதாகவே இருந்து வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது சரியாக தெரியாத நிலையில் தொடரும் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் வழி நடத்தி செல்லும் உங்களின் தலைமையிலான விடியல் அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும் வகையிலே இருப்பது வருத்தம் அளிக்கிறது.
அனைத்து மதமக்களையும் ஒரே நேர்கோட்டில் வழி நடத்தி செல்லும் அரசாக உங்கள் தலைமையிலான திமுக அரசு இருந்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் கந்த சஷ்டி திருவிழாவில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருக்க தடை விதித்துள்ளது என்பது சரியானதல்ல. எனவே, தாங்கள் இதனை கருத்தில்கொண்டு காலம் காலமாக முருக பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் எந்தவிதமான தடைகளும் இன்றி தங்கியிருந்து விரதம் இருந்து இறை வழிபாட்டினை மேற்கொண்டது போன்று இந்த வருடமும் தடைகள் ஏதும் இன்றி சஷ்டி விரதம் இருக்க வழிவகை செய்திடவேண்டும்.
முருக பக்தர்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தான்தோன்றித்தனமாக விதித்துள்ள ”முருக பக்தர்கள் விரதம் இருக்க தடை” என்ற உத்தரவினை தமிழக முதல்வரான தாங்கள் தகர்த்தெறிந்து ”முருக பக்தர்கள் வழக்கம்போல கோவில் பிரகாரத்தில் விரதம் இருக்கலாம்” என அனுமதி வழங்கிடவேண்டும் என்று ஒட்டுமொத்த இந்துக்கள் சார்பில் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் பிறப்பிக்கும் இந்த உத்தரவின் மூலமாக விடியல் அரசான உங்கள் தலைமையிலான அரசு இந்துக்களுக்கு எதிரானது அல்ல அனைத்து மதமக்களுக்கும் பொதுவானதே என்ற முத்திரையை பதித்துடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதோடு, கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார திருவிழாவிற்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, தங்கும் இடம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் தாமதமின்றி செய்து கொடுத்திடவும் வழிவகை செய்திடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.