தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அறிக்கையில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி மாவட்டம் , திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கந்த சஷ்டியை முன்னிட்டு ஆறு நாட்கள் விரதம் இருந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை கண்டுகளித்து , மறுநாள் திருக்கல்யாண நிகழ்ச்சியையும் தரிசித்து செல்வது காலம் காலமாக நடைமுறையில் இருந்துவரும் வழக்கமாகும்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள், மேற்படி கந்த சஷ்டி விரத காலங்களில் கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருக்கும் வழக்கத்திற்கு தடை விதித்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியை வழிபடும் பக்தர்கள் மனதை புண்படுத்தும் செயலாகும் . எனவே தமிழக அரசும் , தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பாரம்பரியமாகவும் வழக்கமாகவும் நடந்துவரும் கந்த சஷ்டி திருவிழாவில் திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் தங்கியிருந்து சஷ்டி விரதத்தை கடைபிடிக்க உரிய அனுமதி தர வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.