திருச்செந்தூர், சரவணய்யர் நடுநிலைப்பள்ளியில், தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற 9-ம் வகுப்பு மாணவியை சிறப்பு விருந்தினராக அழைத்து தேசியக்கொடி ஏற்ற வைத்து ஊக்கப்படுத்தியுள்ளது பள்ளியின் நிர்வாகம்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், பந்தல் மண்டபம் அருகில் சரவணய்யர் என்ற நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி கடந்த 1895-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
திருச்செந்தூரில் தொடங்கப்பட்ட முதல் பள்ளி இப்பள்ளியாகும். மொத்தம் 180 மாணவ, மாணவிகள் பயின்று வரும் இப்பள்ளியில் 11 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.
பொதுவாக, பள்ளிகளில் சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா என்றால் அந்தந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், தாளாளர், சுதந்திரபோராட்ட தியாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர்களில் ஒருவர் தேசியக்கொடியை ஏற்றுவது வழக்கம். ஆனால், இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் 8-ம் வகுப்பு படித்து முடித்த, தேசியத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் இளம் விஞ்ஞானி விருது பெற்ற மாணவர்களை சிறப்பு விருந்தினராக பள்ளிக்கு அழைத்து தேசியக்கொடி ஏற்ற வைத்து மரியாதை செய்வது வருகிறது இப்பள்ளியின் நிர்வாகம்.
இந்தாண்டு, 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கடந்த ஆண்டு இதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து, தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி, ஹரிநாராயணி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றினார்.
கடந்த ஆண்டு தேசியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் சண்முகப்பிரியா, லோகப்ரியா, மதுமதி, மதிவதனி, வெங்கடேஸ்வரி ஆகிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அறிவியல் கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் இரு இடம் பெற்ற முன்னாள் மாணவிகள் காவியா, துர்க்மெஸ்தான் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இது குறித்து பள்ளியின் தாளாளர் ராமச்சந்திரனிடம் கூறுகையில், ஒவ்வொரு வருஷமும் அரசு, தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது எளிதல்ல. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அரசு மாதம் ரூ.500 வீதம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.24,000 உதவித் தொகையாக தருகிறது. எங்கள் பள்ளியில் இந்த தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் 54 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெற்றுள்ளனர். கடந்த இளம் வயதில் சாதனை படைத்த மாணவர்களை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக அழைத்து ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கான தலைமைப்பண்பு வளர்வதுடன் சாதிக்கும் எண்ணமும் உருவாகிறது” என்று கூறினார்.