தூத்துக்குடி மாநகரத்திற்கு குடிநீர் தந்த கோமான் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் ராவ் பகதூர் குரூப் பர்ணாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் ரோச் பூங்கா அருகே அமைக்க தேர்வு செய்தார். அந்த அறிவிப்புக்கு கடும் கண்டன குரல் எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக பரதநல தலைமைச் சங்கத்தின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இது குறித்து பரதர் நல தலைமைச் சங்கத்தின் தலைவர் ரெனால்டு வி.ராயர், பொதுச் செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் காஸ்ட்ரோ ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்; ஐயா ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்து அவர்களுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் ரோச் பூங்காவில் இடம் ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பானது எங்களது சமுதாய மக்களுக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைப்பது அவரை ஒதுக்குவது போல் எங்களுக்கு தெரிகிறது.
இதற்கு முன்னர் ரோச் பூங்காவில் காந்திக்கு சிலை வைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்த பொழுதும் அங்கு காந்தி சிலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அது கைவிடப்பட்டது. இதன் நோக்கம் ரோச் என்ற பெயரை மறைக்கும் வண்ணமாக எங்களுக்கு தோன்றுகிறது. எதற்கு ஒரு பெயரை மறைத்து இன்னொரு பெயரை புகுத்த வேண்டும் என்பதுதான் எங்களது கேள்வி.
பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும் அமைச்சர் கீதாஜீவனிடமும் எங்களது கோரிக்கையான எம்ஜிஆர் பார்க்கில் மணிமண்டபம் அமைத்திட இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என்று கேட்டும் இதனால் வரை அதற்கு தீர்வு கிடைக்கவில்லை நல்லதொரு முடிவு கிடைக்காத பட்சத்தில் எங்கள் சமுதாய மக்களையும் பொது மக்களையும் திரட்டி பட்டினி போராட்டம் நடத்தி எங்களது உணர்வை வெளிப்படுத்துவோம் என்று பரதர் நல சங்க பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் பொழுது பரதன் நல தலைமைச் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.