தூத்துக்குடிக்கு தண்ணீர் தந்த கோமகன் ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து சிலையை மக்கள் விரும்பாத இடத்தில் அமைப்பதற்கு ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து நற்பணி மன்றத்தின் சார்பில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் இன்று (18.10.2022) பெல் ஹோட்டல் கூட்ட அரங்கத்தில் வைத்து குருஸ் பர்னாந்து நற்பணி மன்றம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து, குருஸ் பர்னாந்து நற்பணி மன்றத்தின் தலைவர் கெர்மன்ஹில்டு பர்னாந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது; பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் அவர்களும், உறுதி அளித்தது போல், தற்போது சிலை இருக்கும் இடத்திலே மணி மண்டபம் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள். ஆனால் நேற்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் ரோச் பூங்காவில் குருஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கப்படும் என்று செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தி ஒட்டுமொத்த எங்கள் சமுதாய மக்களுக்கு வேதனை அளிக்கக்கூடிய செய்தி, பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் அவர்களும், எங்கள் சமூக மக்களின் கோரிக்கையான மக்கள் எதிர்பார்க்க கூடிய இடமான தற்போது இருக்கும் இடத்திலேயே மறு சீரமைப்பு செய்து அந்த இடத்திலே மணிமண்டபம் அமைத்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுமாறு எங்கள் சமுதாய மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
தவறும் பட்சத்தில் தொடர் உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம், நடத்துவது தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும், இல்லையேல் எங்கள் சமூக மக்களை ஒன்றுதிரட்டி வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் எங்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பை தெரிவிப்போம் என்று கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில்; பாத்திமா பாபு, சேவியர், எட்வின் பாண்டியன், மற்றும் ராவ் பகதூர் குருஸ் பர்னாந்து நற்பணி மன்ற நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.