தூத்துக்குடி, தாமிரபரணி ஆற்றிலிருந்து வல்லநாடு நீரேற்று நிலையம் மற்றும் கலியாவூர் நீர்த்தேக்கம் பகுதியிலிருந்து தூத்துக்குடி மாநகர பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது; கடந்த வருடம் பருவமழை குறைவாக பெய்துள்ளதால் மாநகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்ககூடிய பாபநாசம் அணை முழுமையாக நிரம்பவில்லை. கோடைகாலம் ஆரம்பமாகியுள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை கொஞ்சம் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையிலும் மக்கள் பாதிக்காத வகையில் மாநகர பகுதியில் உள்ள 31 குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகளில் நீரேற்றப்பட்டு சூழற்சி முறையில் எல்லா பகுதிகளுக்கும் குடிதண்ணீர் முறைப்படுத்தி வழங்கப்பட்டு வருகிறது.
இன்னும் சில தினங்களில் தென்கிழக்கு பருவமழை ஆரம்பமாகவுள்ளதால் அதுவரை பொதுமக்கள் அனைவரும் குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதன்பின்பு மழை காலம் தொடங்கிபின்பு இதுபோன்ற குறைபாடுகள் ஏற்படாது என்றார்.
இந்நிலையில், வல்லநாடு, கலியாவூர் ஆகிய பகுதிகள் மட்டுமன்றி தாமிரபரணி நதிக்கரை பகுதியில் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யும் முறை குறித்து ஆய்வு மேற்கொண்டு மாநகர பகுதி மக்களுக்கு சில தினங்களுக்கு ஒருமுறை மட்டும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதை மேலும் முறைப்படுத்தி தினசரி வழங்குவது சம்மந்தமாக நீர்வரத்து குறித்து அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அங்கு பராமரிப்பு பணி உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் முறையாக இயக்கப்படுகிறதா என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டு, கோடைகாலம் ஆரம்பமாகி இருப்பதால் மக்களின் தாகம் தீர்க்கும் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மாநகராட்சியின் கடமையாகும். ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுபவர்களை உங்களுக்கு கொடுத்திருப்பது பதவி அல்ல மக்களுக்கு பணி செய்யும் பொறுப்பு என்று கூறியது மட்டுமின்றி எல்லோரும் முறையாக பணி செய்கிறார்களா என்பதை கண்காணிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
அதனடிப்படையில் மக்கள் பணியை தொடர்ந்து செய்வதற்கான முயற்சிகளை அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டு வந்துள்ளோம். பொறுப்பேற்று ஓராண்டு முடிந்த நிலையில் கொடுத்த வாக்குறுதிகளை 50 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம் மேலும் பல்வேறு வளர்ச்சி குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம் தன்னார்வலர்களும் தனது பங்களிப்பின் மூலம் மாநகராட்சி வளர்ச்சிக்கு உதவலாம் எந்த குறைகளாக இருந்தாலும் 24 மணி நேரமும் என்னிடமும் ஏற்கனவே கொடுக்கப்பட்டு மாநகராட்சி குறைதீர்க்கும் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்றார்.