தூத்துக்குடி உள்பட தென் மாவட்டத்தில் மூடியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளையும் திறந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கி ராஜா தேவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்தார்.
அலுவலக நுழைவாயில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தார். முருகனின் போர்படை தளபதி வீரபாகு தேவர் என்பதை மாற்றி வீரபாகு மூர்த்தி என பெயர் மாற்றம் செய்துள்ளதை கண்டித்தும், திருச்செந்தூர் பிரகார மண்டபத்திற்கு சின்னப்ப தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்றும், திருச்செந்தூரில் உள்ள கல்வெட்டுகளை பொதுமக்களுக்கு தெரியும்படி பொது இடத்தில் வைக்க வேண்டும், திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழுவில் முக்குலத்தோருக்கு இடமளிக்க வேண்டும். பி சி ஆர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் தென் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வெளியிறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இசக்கி ராஜா தேவர் கூறியதாவது… திருச்செந்தூரில் சாண்டோ சின்னப்ப தேவரால் கட்டிக் கொடுக்கப்பட்ட தேவர் குடில் மறு சீரமைக்கப்பட்டு மீண்டும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும். பாண்டியர்கள் குறித்த தவறான வரலாற்றை வெளியிட்டு வருகின்றனர். மறவர்களே பாண்டியர்கள் என அரசாணை வெளியிட மத்திய மாநில அரசுகள் ஆவணம் செய்ய வேண்டும் திருச்செந்தூர் கோவில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்த வரகுண பாண்டியனால் கட்டப்பட்டது என்ற விவரத்தை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். தூத்துக்குடியில் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை திறந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தினந்தோறும் பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடி வைத்துள்ளார்கள். பல அபாயகரமான தொழிற்சாலைகள் உள்ளது அவற்றை எல்லாம் கண்டு கொள்ளவில்லை. வேலை வாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்கள் கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். பல குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என்றார்.
தூத்துக்குடியில் பல்வேறு கிராமங்களில் நோய் தொற்றுக்கு காரணமாக விளங்கும் டேக் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறினார்.
அவருடன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் இசக்கி முத்து, மாநில பொறுப்பாளர் ராஜசேகர், மாநில இளைஞரணி சுந்தர பாண்டியன், செல்வ சக்தி பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கோபால் சங்கர், தூத்துக்குடி மாவட்ட அமைப்பு செயலாளர் கருங்குளம் சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.