தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் 48000 பயனாளர்களுக்கு அஞ்சல்துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி கிராம அஞ்சல் அதிகாரிகள்/ போஸ்ட்மேன் மூலம் பயனாளர்களுக்கு மாதாந்திர பணம் பெறும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
கணக்கு துவங்க சிறப்பு முகாம் வரும் திங்கள் 14.11.2022 முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகை பெறும் 48000 பயனாளர்களுக்கு இந்திய அஞ்சல்துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்கி கிராம அஞ்சல் அதிகாரிகள்/போஸ்ட்மேன் மூலம் பயனாளர்களுக்கு மாதாந்திர பணம் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ள 14500 கணக்குகளில் முதல் கட்டமாக 5000 பயனாளர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் கடந்த இரண்டு மாதமாக வரவு வைக்கப்பட்டு பண பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. மீதம் உள்ள பயனாளர்களுக்கு கணக்கு துவங்க சிறப்பு முகாம் வரும் திங்கள் 14.11.2022 முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு திட்ட பயனாளர்களுக்கு துவங்கப்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கின் சிறப்பு அம்சங்களாக இருப்பு தொகை , கணக்கு பராமரிப்பு தொகை , குறுஞ்செய்தி கட்டணம் போன்ற எதுவுமே கிடையாது. மிகவும் வயதான பயனாளர்களுக்கு அவர்களின் வீட்டிலேயே சென்று எந்த கட்டணமும் இல்லாமல் மாதாந்திர பணம் பட்டுவாடா செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்காத சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை , மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகை பெறும் பயனாளர்கள் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு துவங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் புதிய கணக்கு துவங்க வரும் பயனாளர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் கைபேசியும் கொண்டுவரும்படி தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தின் கோட்ட கண்காணிப்பாளர் மு.பொன்னையா கேட்டுக் கொண்டுள்ளார்.