தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில், கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி காரணமாக இடம்பெயர்ந்த மீனவமக்கள், கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா வழங்காத காரணத்தினால், ஓலைக்குடிசை வீட்டில் இருளில் பெரும் சிரமத்திற்கு இடையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு மின் இணைப்பு கொடுக்காத தமிழக அரசு இலவச டி.வி.,மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், மட்டும் கொடுத்துள்ளதால், அவையனைத்தும் எந்த பயனும் இன்றி குடிசை வீட்டின் ஒரு மூலையில் முடங்கி கிடக்கின்றன. மேலும், இவர்கள் சமையலுக்கு மிக்ஸியில் தேங்காய் அரைப்பதற்கும், செல்போனில் சார்ஜ் போடுவதற்கும்கூட பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஒவ்வொருமுறையும் ரூ.10 பணம் கொடுக்க வேண்டிய பரிதாப சூழ்நிலையில்தான்… பட்டாவிற்காக போராடி வருகின்றனர் இந்த மீனவ மக்கள்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கடற்கரை கிராமம் வேம்பார். இங்குள்ள பெரும்பாலான மக்கள் மீன்பிடித் தொழிலைத்தான் பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இப்பகுதியில் சுமார் 18-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் முன்காலங்களில் கடற்கரையோரம் குடிசை அமைத்து, கடலில் தொழிலுக்கு சென்றுவந்து தங்களது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர். அப்போது கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் காரணமாக அரசாங்கம் இம்மக்களின் பாதுகாப்பு கருதி இவர்களை கடற்கரை ஓரத்தில் இருந்து அப்புறப்படுத்தி குடியிருப்பு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவ்வாறு தற்காலிக குடியிருப்பில் தங்க வைக்கப்பட்ட மீனவ மக்கள் சிலருக்கு மட்டுமே அரசு சார்பில், இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கு கடந்த 18 ஆண்டுகளாக பட்டா வழங்காமல் அரசு அதிகாரிகள் அலைக்கலைப்பு செய்து வருகின்றனர். அரசாங்கம் இந்த மக்களுக்கு பட்டா வழங்காத ஒரே காரணத்தினால், இவர்களால் வீடு கட்டிக் கொள்ள முடியாமலும் மின்னி இணைப்பு ஏற்படுத்திக் கொள்ள முடியாமலும் ஓலை குடிசையில் தங்களது குடும்பத்துடன் இருட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
சுனாமியின் காரணமாக பாதுகாப்பு கருதி எங்க தங்க வைக்கப்பட்ட மீனவ மக்களுக்கு அரசு எந்தவித உதவியும் செய்யாத காரணத்தினால், சிறிய ஓலை குடிசையில், மணல் தரையில் சிமிழி விளக்கின் வெளிச்சத்தை கொண்டு பெரும் சிரமத்திற்கு இடையில், விஷ ஜந்துக்களின் ஆபத்தான சூழ்நிலையில்தான் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் இப்பகுதி மக்கள். அதிலும் மழைக்காலங்களில் மழைநீர் குடிசையின் உள்ளே வருவதிலிருந்து சிறிதளவாவது தப்பிக்க வேண்டும் என்பதற்காக தார்பாய்களை வாங்கி கூரையின் மீது போட்டு மூடி வைத்துள்ளனர். இருப்பினும் மணல் தரை என்பதால் சேற்றிலும் சகதியிலும் தான் இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இம்மக்கள்.
அரசு சார்பில் ஒரு குடிமகனுக்கு வழங்கப்பட வேண்டிய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை என இவற்றை மட்டும் வழங்கிய தமிழக அரசு தங்களுக்கு பட்டா வழங்காமல் 18 ஆண்டுகளுக்கும் மேலாக அலைக்கலைப்பு செய்து வருகிறது என்றும், இதனால் மின் இணைப்பு கூட பெற முடியாத தங்களுக்கு இலவச டிவி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்டவை வழங்கி என்ன பயன் என்றும், அவையனைத்தும் குடிசையின் ஒரு மூலையில் பயனற்று கிடக்கின்றது என்றும் வேதனையுடன் கூறுகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் இப்பகுதியில் உள்ள தெருவிளக்கின் வெளிச்சத்தில் தான் இப்பகுதி மக்கள் உணவு சமைத்து வருகின்றனர். இப்பகுதி குழந்தைகள் மின் இணைப்பு இல்லாததால் சிறிய விளக்கின் வெளிச்சத்தை கொண்டும், மொபைல் டார்ச் லைட்டின் வெளிச்சத்தை கொண்டுமே பாடங்களைப் படித்து வருகின்றனர். சரிவர படிக்க முடியாத காரணத்தினால் இப்பகுதி குழந்தைகளில் பலர் ஆரம்பக் கல்வியிலேயே அவர்களின் படிப்பை நிறுத்திவிட்டதாக கூறுகின்றனர். வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை தங்களுக்கு பட்டா வழங்கி மின் இணைப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் தங்கள் குழந்தைகளின் கல்வியை கருதி கூட அரசு எங்களுக்கு பட்டா வழங்கி, மின் இணைப்பு வசதி ஏற்படுத்தித்தர முன்வரவில்லை என தங்களின் வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.
அன்றாடம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தால் தான் தங்களுக்கு சாப்பாட்டுக்கு பணமே உண்டு அப்படி இருக்கும் நிலையில், மின்சார வசதி இல்லை என்ற காரணத்தால் தாங்கள் சமையலுக்கு மிக்சியில் தேங்காய் அரைப்பதற்கும், செல்போனில் சார்ஜ் போடுவதற்கும் அருகாமையில் உள்ள வீடுகளில் ஒவ்வொரு முறையும் ரூ.10 பணம் கொடுத்துதான் பயன்படுத்த வேண்டியுள்ளது என தங்களின் பொருளாதார நிலையை கூறி கண்ணீர் மல்க புலம்புகின்றனர்.
எனவே, ஓலை குடிசையில் மின் இணைப்பு இன்றி குடிநீர், கழிப்பறை, மின்சாரம் என எவ்வித வசதியும் இன்றி சொந்த மண்ணிலேயே அகதியைப்போல் வாழ்ந்து வரும் இந்த மீனவ மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக இலவச பட்டா வழங்கி, அரசின் வீடு கட்டும் திட்டத்தில் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்து மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பதை இந்த மக்களின் பல்லாண்டு கோரிக்கையாக உள்ளது.