ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த 2018-ல் தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் 100-வது நாளில் (மே-22) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதற்காகப் பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து (மே 28-ம் தேதி) அரசாணை வெளியிடப்பட்டு, ஆலை சீல் வைத்து மூடப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலை சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் நியமிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்த வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, பின்னர் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. அதைத் தொடர்ந்து சி.பி.ஐ விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில், வழக்கை விசாரணை செய்து வரும் சிபிஐ அண்மையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருக்கும் இடைக்கால அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பத்திற்கு காரணமான புதுக்கோட்டை காவல் காவல் ஆய்வாளர் திருமலை மற்றும் 101 பொது மக்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருப்பது மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சி.பி.ஐ விசாரணையின் அறிக்கையை ஆட்சேபித்தும், மறுவிசாரணை நடத்தக் கோரியும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர், வருவாய்த்துறையினர் அனைவர்மீதும் கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யக் கோரியும் நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
இது குறித்து கே.எஸ்.அர்ச்சுணன் கூறுகையில், தூத்துக்குடியில் வேதாந்தா குழுமம் சார்பில் தாமிர உருக்காலை தொடங்கப்பட்டது. இந்த ஆலை தொடங்கப்பட்டதில் இருந்து தூத்துக்குடி மக்கள், மீனவர்கள் சுற்றுச்சூழலுக்கு பாதகமாக இந்த ஆலை அமையும் என்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் திட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் தான் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய போது காவல்துறையினர், வருவாய்த்துறையினரால் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த 13 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2018 ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி உள்துறை செயலாளர் மற்றும் சிபிஐ இணை இயக்குனர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.
அதன் பிறகு, துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதியரசர் செல்வன் மற்றும் அகமது ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு யாராவது புகார் மனு அனுப்பியிருந்தால் அதன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். அந்த உத்தரவுப்படி சிபிஐ இணை இயக்குனரை சந்தித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று வழங்கினோம். ஆனால் சிபிஐ உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் காலம் கடத்தி வந்தார்கள். எனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சிபிஐ மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டது. அதன் பின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அந்த விசாரணையில் யாரையும் குறிப்பிடாமல் பொத்தம் பொதுவாக தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டது.
துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்று 5 ஆண்டுகள் காலம் முடிந்த பிறகு கூட சமீபத்தில் சிபிஐ நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு சம்பந்தமாக ஒரு இடைக்கால அறிக்கை என்பது தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்த அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புகார் மனுவில்) இதற்கு காரணமான வருவாய்த்துறையினர், காவல்துறையினர் யார்? யார்? என்பது பெயர் குறிப்பிட்டு அந்த புகார் மனு அளித்து இருக்கின்றோம்.
அதன் பிரகாரம் அந்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாமல் இடைக்கால விசாரணை அறிக்கையில் ஒரே ஒரு காவல்துறை அதிகாரியை மட்டுமே குறிப்பிட்டு இருந்தார்கள். எனவே புகார்தாரர் என்ற முறையில் இடைக்கால அறிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்து புரட்டஸ்ட் பெட்டிஷன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பதில் மனு என்பது தாக்கல் செய்யப்பட்டது. அது சமீபத்தில் அந்த அறிக்கை ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு வந்திருக்கின்றது.
நாங்கள் கூற வருவது என்னவென்றால் சிபிஐ விசாரணை ஏற்கத்தக்கதல்ல, மீண்டும் மறுவிசாரணை ஏற்க வேண்டும். காவல்துறை, வருவாய்த்துறையினர் மற்றும் இதற்கு காரணமானோர் மீதும் 302 கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகார் மனுவில் உள்ளது. அதனடிப்படையில், சிபிஐ விசாரணை இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தை அணுகி போராட்டம் நடத்தி வருகிறோம் என்றார்.