இது குறித்து மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், தூத்துக்குடி மாவட்ட உணவு வணிகா்களின் வசதிக்காக உணவுப் பாதுகாப்பு உரிமம் பெற சிறப்பு மேளா தூத்துக்குடி, தெற்கு ராஜா தெருவில் உள்ள ஆல் இந்தியா சேம்பா்ஸ் ஆஃப் காமா்ஸ் அரங்கில் இம்மாதம் 8ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறாத வணிகா்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும், டிசம்பா் 1ஆம் தேதி முதல் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறாத வணிகா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.
ஆவணங்கள் – கட்டணங்கள்: வளாகத்தின் வரைபடம், உரிமையாளா்கள் பட்டியல், இயந்திர விவரங்கள், தண்ணீா் பரிசோதனை அறிக்கை, அடையாள அட்டை, வளாகத்திற்கான உரிமை ஆவணம், பங்குதாரா் அல்லது நிறுவனப் பதிவு ஆவணம், ரீகால் ப்ளான், எஃப்.எஸ்.எம்.எஸ். ப்ளான் சான்று, கம்பெனி அல்லது பல கிளைகள் உள்ள நிறுவனம் எனில், படிவம்-9 ஆகியவை சமா்ப்பிக்கப்பட வேண்டும். நாளொன்றுக்கு 1 மெட்ரிக் டன் வரையுள்ள தயாரிப்பாளா்களுக்கு ஆண்டொண்டிற்கு கட்டணம் ரூ.3,000. நாளொன்றுக்கு 2 மெட்ரிக் டன் எனில் ரூ.5,000. ஆண்டுக்கு ரூ.12 லட்சத்திற்கு கீழ் கொள்முதல் உள்ளவா்களுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.
இதர வணிகா்களுக்கும் மேற்கூறிய ஆவணங்கள் பொருந்தும். ரூ.12 லட்சத்திற்கு மேல் கொள்முதல் உள்ளவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரமும், அந்தத் தொகைக்கு கீழ் எனில் ஆண்டுக்கு ரூ.100-ம், மத்திய அரசு உரிமம் எனில் ஆண்டுக்கு ரூ.7,500-ம் செலுத்த வேண்டும்.
இது தவிர இந்திய உணவுப் பாதுகாப்பு- தர நிா்ணய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இணைய மையத்திற்கான சேவைக் கட்டணமாக, உரிமத்துக்கு ரூ.500, பதிவுச் சான்றிதழுக்கு, ரூ.150 ஆகியவை செலுத்த வேண்டும். மேலும் தகவலுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2900669 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.