தூத்துக்குடி, 2ம் கேட் பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள சந்திப்பில் கூடும் கட்டிட பணியாளர்கள் கூடாமல் இருக்க காவலர்களை பணி அமர்த்த வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் சுடலை மணி இன்று (19.06.2023) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து அவர் அளித்த மனுவில்” தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லையான, கிழரதவீதி தொடர்ச்சி “அருள்மிகு ஸ்ரீ வடபத்ரகாளி அம்மன்” திருக்கோவில் அமைந்துள்ளது. மற்றும் கழிவுநீர் செல்லக்கூடிய பக்கில் ஓடை பாலம் அமைந்துள்ளது. (இரண்டாம் ரயில்வே கேட் பகுதியில் இருந்து அமெரிக்கன் மருத்துவமனை செல்லும் சாலை) திருக்கோவில் முன் பகுதியான நான்கு சந்திப்பு சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாகும்.. இப்பகுதியில் தினக்கூலிகளாக பணிபுரியக்கூடிய கட்டிட தொழிலாளர்கள் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்த சந்திப்பில் நின்று வேலைகளுக்கு செல்வதற்காக காத்து நிற்கின்றனர். அது மட்டுமில்லாமல் பள்ளிகளுக்குச் செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக நின்று கொண்டு வருகின்றனர்.
வாகனங்களில் ஒலி பெருக்கி அடித்தால் கூட அதை கண்டுகொள்ளாமல் சாலையின் இருபுறத்திலும் கூடி அவர்கள் வரக்கூடிய இருசக்கர வாகனங்களையும் இடையூறாக நிறுத்தி வருகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே, மேற்படி இடத்தினை முறையாக ஆய்வு செய்து அங்கு கட்டிட தொழிலாளர்கள் சந்திப்பு சாலையில் கூடாமல் இருப்பதற்கு காவலரை பணி அமர்த்தவேண்டும் என்றார்..