தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அமலிநகரில் சுமார் இரண்டாயிரம் மீனவ குடும்பங்கள் உள்ளன. சுமார் 200 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் படகுகளும் வலைபின்னும் கூடங்கள், கடலோரத்தில் உள்ள வீடுகள் சேதமடைகின்றன.
மேலும், கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கடலில் தூண்டில் பாலம் அமைக்க வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, தமிழக சட்டமன்றம் 2022-23 ம் ஆண்டு மீன்வளத்துறை மானிய கோரிக்கையின் போது, திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக ரூ.58 கோடியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் தூண்டில் பாலம் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தூண்டில் பாலம் அமைக்க வலியுறுத்தியும். இப்பணியை உடனடியாக துவங்க கோரியும், அமலிநகர் மீனவர்கள் 20ந் தேதி தங்கள் பைபர் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டமானது, இன்றுடன் பிப் (23) 4வது நாளை எட்டியுள்ள நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர்களுடன் ஆட்சியர் செந்தில்ராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பேச்சுவார்த்தைக்கு பின் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி, திருச்செந்தூர், அமலி நகர் பகுதியில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று 58 கோடி மதிப்பிட்டில் தூண்டில் பாலம் அமைக்கப்படும் என்ற உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வேலை நிறுத்தத்தை மீனவர்கள் வாபஸ் பெற்று நாளை இரவு முதல் மீனவர்கள் கடலுக்கு செல்வதாக கூறியுள்ளனர்.
மேலும், அந்த பகுதியில் உள்ள பல்வேறு குறைகளுக்கும் உடனடியாக தீர்வு காணப்படும் என்று கூறினார்.