பகுஜன் திராவிட கட்சி சார்பாக, பாகுபாடற்ற ஒடுக்கு முறையற்ற பாரதத்தை உருவாக்கிட, பகுஜன திராவிடர்களின் வலிமைக்கான, விடுதலைக்கான, மாற்றத்திற்காக, பேகம்புரா பாரத சகோதரத்துவ பயணத்தை நடத்தி வருகிறது.
ஜனவரி 20ந் தேதி தொடங்கி மார்ச் 15 வரை 20 மாநிலங்களில் 55 நாட்கள் 11,399 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொள்ளும் இவர்கள் நேற்று தூத்துக்குடிக்கு வருகை தந்தனர்.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள திராவிடர் கழக அலுவலகத்திற்கு வருகை தந்த இவர்களை திராவிடர் கழகம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், பகுஜன் திராவிட கட்சியின் நிறுவனர் ஜீவன் குமார் மள்ளா செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது அவர் கூறுகையில், பாகுபாடற்ற, சகோதரத்துவ, பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த யாத்திரை நடத்தி வருகிறோம். பீகார், ஜார்கண்ட், ஒரிசா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஆந்திர பிரதேஷ், தெலுங்கானா, கர்நாடகவை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று முன்தினம் பெரியார் திடலில் ஆரம்பிக்கப்பட்ட இப்பயணம் 22வது நாளாக தூத்துக்குடி வந்தடைந்துள்ளது.
ராகுல் காந்தி சமீபத்தில் நடத்திய யாத்திரை பயணம் பணத்தை விதைத்து யாத்திரை நடத்திக் கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் கருத்துக்களை விதைத்து யாத்திரை நடத்துகின்றோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பட்டியலின மக்களுக்கு, பழங்குடியின மக்களுக்கு, மத சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள். இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியலுக்கு மாற்று கருத்தாக ஒரு கருத்து தேவைப்படுகிறது. அது காங்கிரஸிடம் இல்லை, ஆர்எஸ்எஸ்-ன் அடிப்படையில் காங்கிரஸ் வேலை செய்து கொண்டிருக்கிறது. தற்போது பிஜேபி அரசு ஆர்எஸ்எஸ் கருத்தை மையமாக்கி கொண்டு செயல்பட்டு வருகிறது.
இதற்கு எதிர் நேராக சகோதரத்துவத்தை போதிக்கின்ற, சமத்துவத்தை போதிக்கின்ற, சுதந்திரத்தை போதிக்கின்ற, நீதியை போதிக்கின்ற இந்த கருத்து பெரியாருக்கு அடுத்து கன்சிராமிடம் இருக்கின்றது. இந்த கருத்து இந்திய தேசம் முழுவதும் தேவைப்படுகிறது. இந்த கருத்து மக்களிடம் செல்லாததால் பல அடக்குமுறை, வன்முறை கலவரம் நடப்பதற்கான சாதி மோதல் காரணியாக உள்ளது. மக்களை பிளவுப்படுத்துகிறது.
சகோதரத்துவம் பார்ப்பணியத்திற்கு எதிரான கருத்தாகும். சாதிகள் இருக்கின்ற வரை சகோதரத்துவம் உணர்வை உணர முடியாது. பெரியாரின் கருத்து தேசம் முழுவதும் தேவைப்படுகிறது. தேசம் முழுவதும் பரப்பப்பட வேண்டியாதாக இருக்கிறது. இதற்காக, பயணம் செய்து கொண்டிருக்கிறோம். வரலாற்றில் ஒரு அரசியல் பயணம், ஒரு கொள்கையை சுமந்து செய்கின்ற பயணம் இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறையாகும்.
கன்சிராம் இயக்கம் தீர்வை சொல்லக்கூடிய இயக்கம், 2024 அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் பாராளுமன்றம் தான் உயர்ந்தது என்று அரசியல் சட்டம் சொல்கிறது. நீதிமன்றமும், நிர்வாகமும் அதற்கு அடியாட்களாக வேலை செய்யக்கூடியது. இந்த பிரச்சாரத்தின் நோக்கம் இந்த பாராளுமன்றத்தை கைப்பற்றுவது தான். ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த ஜனநாயகத்தில் ஆட்சி செய்ய வேண்டும்.
இந்தியாவினுடைய ஒட்டுமொத்த பார்வையும் தமிழகத்தை நோக்கி உள்ளது. தமிழர்களுடைய அந்த மாடல் திராவிட மாடலுக்கு சொந்தக்காரர் பெரியார் தான்,
பிஜேபி, ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக மற்றொரு கருத்து தேவைப்படுகிறது. அதற்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரியாரின் கருத்து தான் தேவைப்படுகிறது. தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. ஆர்எஸ்எஸ்-ல் அனுப்பப்பட்ட ஒரு நபர் தமிழகத்தில் கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வந்த அவர் இம்மண்ணை பார்த்த பின்பு அவர் பெரியார் வாதியாக மாறிவிட்டதாக கூறிய அவர், தமிழகத்தை பார்த்தவுடன் அவர்கள் வேறுவிதமான கலாச்சாரத்தை திராவிட கலாச்சாரத்தை சாதி, மத ஒற்றுமை நிலை நாட்டுகின்ற கருத்து மேலோங்கி விட்டதாக கூறினார்.