தமிழகத்தில் 1996-ல் இருந்து 2001-ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் அப்போது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராகவும், மாவட்ட திமுக செயலாளராகவும் இருந்த என்.பெரியசாமி வருமானத்திற்கு அதிகமாக அவரது குடும்பத்தினர் பெயரில் சொத்து சேர்த்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த 2003-ம் ஆண்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் என்.பெரியசாமி மற்றும் அவரது மனைவி எபனேசர் அவர்களது மகளும் தற்போது தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜூவன், அவரது கணவர் ஜூவன் ஜேக்கப், மற்றும் பெரியசாமி மகன் ஜெகன் பெரியசாமி (தற்போது தூத்துக்குடி மாநகராட்சி மேயர்) மற்றொரு மகன் ராஜா உள்ளிட்ட 6-பேர் மீது வழக்கு தாக்கல் செய்ததது.
இந்த வழக்கானது கடந்த 2014-ம் ஆண்டு முதல் 7-ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரணை செய்த மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று அமைச்சர் கீதா ஜீவன், அவரது கணவர் ஜீவன் ஜேக்கப், அமைச்சர் கீதாஜூவன் தாய் எபனேசர், தம்பி ஜெகன் பெரியசாமி (மேயர்) மற்றொரு தம்பி ராஜா உட்பட ஆறு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், அரசியல் காழ்புணர்ச்சியால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு எங்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 21 ஆண்டுக்கு பின்பு இந்த தீர்ப்பில் நீதி கிடைத்துள்ளது. நியாயம் வென்றுள்ளதாக கூறினார்.
இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக எட்டையாபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.