சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், திமுக அரசைக் கண்டித்து பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் மூன்று கட்டமாக போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்திருந்தது.
அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர், கயத்தார், கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் பேரூராட்சி பகுதியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடம்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பங்கேற்றார்.
விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எட்டயபுரத்தில் பேருந்து நிலையம் முன்பு நகரத் தலைவர் ராஜ்குமார் ஏற்பாட்டின் பேரிலும், அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கழுத்தில் கருப்பு துண்டு, காய்கறிமாலை அணிந்து.கையில் சிம்னி விளக்கினை கையில் ஏந்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடம்பூர், கயத்தார், கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம், புதூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.