“தூத்துக்குடி தேர்தல் களம்: அனுபவம் vs புதிய அலை — உதயசூரியனா? விசிலா?”
தூத்துக்குடி: தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி, இந்த தேர்தலில் அரசியல் ரீதியாக மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒரு புறம் ஆட்சியில் இருக்கும் திமுக சார்பில் அனுபவமிக்க அமைச்சரான கீதாஜீவன் போட்டியிடுகிறார். மறுபுறம் புதிதாக அரசியல் அரங்கில் களம் இறங்கிய நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அவரது நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத் போட்டியிடுகிறார்.. அதிமுக சார்பில் செல்ல பாண்டியன் போட்டியிடுகிறார். ஆனால் களமானது திமுக-தவெக என இரு வேறு அரசியல் அணுகுமுறைகளின் மோதலாகவே மாறியுள்ளது.
தேர்தல் பிரசாரம் ஆரம்பித்த நாளிலிருந்து காலை, மாலை என இடைவிடாமல் இரு கட்சிகளும் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். கடந்த இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கீதா ஜீவன், தன்னுடைய பதவிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய அனுபவத்தை முன்வைத்து வாக்காளர்களை அணுகுகிறார். இதன் விளைவாக, அவர் செல்லும் இடமெல்லாம் உற்சாகமான வரவேற்பு கிடைக்கிறது.
இதற்கெதிராக, அரசியலில் புதிதாக களம் இறங்கிய விஜயின் தாக்கம் இளைஞர்கள் மத்தியில் தெளிவாகப் பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலை முதன்முறையாக எதிர்கொள்ளும் விஜய், தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தூத்துக்குடியில் அவரது நண்பர் ஸ்ரீநாத் போட்டியிடுவதால், இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் அவருக்கு உற்சாகமான ஆதரவை வழங்கி வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய், திமுக கூட்டணிக்கும் தனது கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அந்தக் கூற்று, தூத்துக்குடி தொகுதியில் தற்போது நிதர்சனமாக வெளிப்படுகிறது. அனுபவமும் சாதனைகளும் கொண்ட திமுக வேட்பாளருக்கும், புதிய அரசியல் ஆர்வமும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பும் கொண்ட தவெக வேட்பாளருக்கும் இடையே கடுமையான போட்டி உருவாகியுள்ளது.
இதனால், “உதயசூரியன்” சின்னமா அல்லது “விசில்” சின்னமா என்ற கேள்வி தான் தூத்துக்குடி மக்களிடையே பெரும் விவாதமாக மாறியுள்ளது. இறுதியில், அனுபவத்தை மக்கள் தேர்வு செய்வார்களா அல்லது மாற்றத்தைக் கோரும் புதிய அலைக்கு ஆதரவளிப்பார்களா என்பது இந்த தேர்தலின் முக்கிய முடிவாக இருக்கும்.
செய்தியாளர் மு.மணிகண்டன்