“இது அரசியல் நாடகம்” – சோதனைக்கு எதிராக சுந்தரராஜ் பதில்.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், கடந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியில் ஏற்பட்ட பிளவில் சசிகலா – டி.டி.வி. தினகரன் அணியுடன் இணைந்ததால், அவர் தனது எம்எல்ஏ பதவியை இழந்தார்.
தற்போது நடைபெறும் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், “குக்கர்” சின்னத்தில் சுந்தரராஜ் மீண்டும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக அவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் இதுவரை ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பணம் பதுக்கி வைத்துள்ளாரா என வருமான வரித்துறையினரும் இணைந்து தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயற்சிகள் நடந்ததாக பல இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வரும் சூழலில், இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சுந்தரராஜ் விளக்கமளிக்கையில், தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் நிலையில் தன்னுடைய வெற்றி உறுதியாக இருப்பதை உணர்ந்த அரசியல் எதிரிகள் திட்டமிட்டு இந்த சோதனையை நடத்தி, தனது தேர்தல் பணிகளை முடக்க முயற்சிக்கின்றனர் என குற்றம் சாட்டினார்.
மேலும், இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல; மக்களின் தீர்ப்பை மாற்ற முயலும் அரசியல் நாடகம் என்றும், உண்மை வெளிவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆதரவே தனது மிகப்பெரிய பலம் என்றும், எந்த சூழ்ச்சியும் அதை மாற்ற முடியாது என்றும், இறுதி தீர்ப்பு மக்களுடையது அது வளர்ச்சிக்காக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர் மு.மணிகண்டன்