ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக வேட்பாளர் மாற்ற கோரி போராட்டம்.!
தூத்துக்குடி: வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி தனது வேட்பாளர் பட்டியலை சென்னையில் வெளியிட்டது. இதில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளராக ராமஜெயம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தொகுதிக்கு வெளியே சேர்ந்தவரான ராமஜெயம் தேர்வு செய்யப்பட்டதற்கு கட்சியினரிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ஒட்டநத்தம் கிராமத்தில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் திரண்டு, வேட்பாளர் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து, ஒன்றிய மகளிர் அணி தலைவி லில்லி காமினி ரோஸ்லின் கூறுகையில், “ஓட்டப்பிடாரம் தொகுதியில் மக்கள் ஆதரவு பெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும். தொகுதியைச் சேர்ந்தவரல்லாத ராமஜெயத்தை மாற்ற வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
சண்முகையா, கடந்த காலத்தில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியதுடன், நீண்ட காலமாக அதிமுக ஆதிக்கத்தில் இருந்த தொகுதியை திமுகவுக்குக் கொண்டுவந்தவர் என ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற போராட்டங்கள் கல்லத்திகிணறு, ஓணமாக்குளம், இளவேலங்கால், சங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்றன.
அங்கு திரண்ட மகளிர் அணி நிர்வாகிகள், “ராமஜெயத்தை மாற்றி சண்முகையாவை மீண்டும் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என ஒருமித்த கோரிக்கை முன்வைத்தனர்.
இதனால் ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுகவின் வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருவது வெளிப்படையாகியுள்ளது.
செய்தியாளர் மு.மணிகண்டன்