கோவில்பட்டியில் மாற்றத்தைக் கோரும் பாண்டி: மாட்டு வண்டியில் வந்த வேட்புமனு ஊர்வலம்.!

கோவில்பட்டியில் மாற்றத்தைக் கோரும் பாண்டி: மாட்டு வண்டியில் வந்த வேட்புமனு ஊர்வலம்.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இன்று அரசியல் சூழல் ஒரு வித்தியாசமான காட்சியை கண்டது. ஆம், வழக்கமாக கார்கள், ஜீப்புகள் நிரம்பியிருக்கும் தேர்தல் ஊர்வலங்களுக்கு மாறாக, இம்முறை மாட்டு வண்டி முன்னிலையில் மக்கள் கவனம் ஈர்த்தார் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் பாண்டி, 

லெட்சுமி மில் மேம்பாலம் முதல் தனது வேட்புமனு ஊர்வலத்தை தொடங்கிய பாண்டி பாரம்பரியத்தின் மணம் வீசும் அந்த ஊர்வலத்தில், விவசாயிகள் ஏர் கலப்பைகளை ஏந்தி மாட்டு வண்டியில் முன்னணியில் சென்றனர். 

மேளம், தாளம் முழங்க உற்சாக குரல்கள் ஒலித்துக்கொண்டே, ஆதரவாளர்கள் பின்னால் நீண்ட வரிசையாக நகர்ந்தனர்.

இந்த ஊர்வலம் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை அடைந்ததும், பாண்டி தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியும் சார் ஆட்சியருமான ஹீயூமன் சூமங்களிடம் தாக்கல் செய்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாண்டி, "திராவிட கட்சிகளுக்கு மாற்றாக கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி வரவேண்டும் என்பது மக்களின் எண்ணம். இந்த தொகுதியில் அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லை. மருத்துவ வசதி, சாலை வசதி, தரமான கல்வி, குடிநீர் இவை எல்லாம் மக்களுக்கு கிடைக்க வேண்டும்,” என்றார்.

மேலும், திமுக மற்றும் அதிமுக கட்சிகளை விமர்சித்த அவர், “இரு கட்சிகளின் வேட்பாளர்களும் இதுவரை தொகுதிக்காக எதையும் செய்யவில்லை. இந்த முறை மக்கள் மாற்றத்தை தேர்வு செய்வார்கள். நாம் தமிழர் கட்சி உறுதியாக வெற்றி பெறும்,” என நம்பிக்கையுடன் கூறினார்.

மாட்டு வண்டியில் தொடங்கிய இந்த அரசியல் பயணம், கோவில்பட்டியில் மாற்றத்தின் விதையை விதைக்குமா என்பது வரும் தேர்தலில் தெரியும். ஆனால் இன்று, அந்த ஊர்வலம் மக்கள் மனதில் ஒரு கேள்வியை எழுப்பியது.. “இம்முறை மாற்றமா?”