திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு.!

திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு.!

தூத்துக்குடி: தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், இன்று திருச்செந்தூர் தொகுதியின் உடன்குடி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட செம்மறிக்குளம் ஊராட்சியில் உள்ள ராமசுப்ரமணியபுரம், வலசைகிணறு, கல்விளை, பூலிகுடியிருப்பு, அனைத்தலை உள்ளிட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், கல்விளை கிராமத்திற்குள் பிரச்சார வாகனத்தில் சென்றபோது, அங்கு கூடியிருந்த கிராம மக்கள் ஆவேசத்துடன் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 “எங்கள் ஊருக்கு இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. கோவில் கட்டித் தருவதாக அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை” என்று குற்றம் சாட்டினர்.

மேலும், அதிருப்தியில் இருந்த சிலர் திமுக பிரமுகர் ஒருவரின் சட்டையைப் பிடித்து கேள்வி எழுப்பியதுடன், அவர்களை கிராமத்திலிருந்து வெளியேற்றினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.