தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாகனம் தூத்துக்குடியில் சோதனை.!
தூத்துக்குடி: ஏப்ரல் 23ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.
விமான நிலையத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கீதா ஜீவன், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராமஜெயம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கருணாநிதி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மார்க்கன்டேயன், மனோ தங்கராஜ், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கார் மூலம் அவர் திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருக்கும் போது வாகைகுளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தமிழக முதல்வரின் காரை மறித்து முழுவதுமாக சோதனை செய்தனர்..
அப்போது, முதல்வர் மு.க ஸ்டாலின் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி அருகே நின்று கொண்டிருந்தார். பின்னர், அங்கு கூடியிருந்த மக்களை பாதுகாப்பு கருதி போலீசார் அகற்றியபோது அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் அருகே வாருங்கள் என அழைத்து அங்கு நின்ற மாணவியிடம் என்ன படிக்கப் போகிறாய்? நன்றாக படிக்க வேண்டும் என மாணவியிடம் கேட்டுக்கொண்டார்..
பின்னர் சோதனை முடிந்த பிறகு அங்கிருந்து மீண்டும் காரில் ஏறி திருநெல்வேலி புறப்பட்டு சென்றார்..
செய்தியாளர் மு.மணிகண்டன்