தூத்துக்குடியில் வாக்கு பணம் விநியோகம்: திமுகவினர் கைது.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய சம்பவத்தில் திமுகவினரை பறக்கும் படை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளிநாயகபுரம் 5வது தெருவில் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில இளைஞர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்தது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.
உடனடியாக கூட்டுறவு சார் பதிவாளர் பொன்மாரி தலைமையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்த பறக்கும் படையினர் அந்த பகுதிக்கு விரைந்தனர். அதிகாரிகளை கண்டதும் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.
இதில் ஒருவரை பறக்கும் படையினர் விரட்டிப் பிடித்தனர். அவரை சோதனை செய்தபோது ரூ.500 நோட்டுகளாக ரூ.1,05,000 பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வாக்காளர் பெயர், பாக எண், வரிசை எண் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு குறிப்பேடும் அவரது வசம் இருந்தது.
இதையடுத்து அந்த இளைஞரை (திமுக) கைது செய்த பறக்கும் படையினர், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்திற்கு ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் மு.மணிகண்டன்