அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் தூத்துக்குடி மக்கள்.!

அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் தூத்துக்குடி மக்கள்.!

தூத்துக்குடி: 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி அவதி: ஏழுமலையான் நகர் மக்கள் வேதனை.!

தூத்துக்குடி மாநகராட்சியின் 15வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான ஏழுமலையான் நகர் மேற்கு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக அப்பகுதி குடியிருப்போர் சங்கம் தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் குடிநீர், சாலை, கழிவுநீர் வடிகால் மற்றும் தெருவிளக்கு போன்ற அத்தியாவசிய வசதிகள் எதுவும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த இரண்டு மாதங்களாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குடியிருப்போர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஏழுமலையான் நகர் மேற்கு பகுதி முழுவதும் நகரமைப்பு இயக்குநரகத்தின் (DTCP) அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவாக இருந்தும், வீடுகள் கட்டிட அனுமதி பெற்று சட்டப்படி கட்டப்பட்டும், குடியிருப்போர் வரிகளை முறையாக செலுத்தி வருகிறோம். இருந்தபோதிலும், மாநகராட்சி சார்பில் அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

1990-களில் மனைப்பிரிவு அமைப்பாளர்களால் சாலை மற்றும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டதாகவும், 1999 ஆம் ஆண்டு 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், 2003 வரை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் சாலை விரிவாக்கப் பணிகளின் போது குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததாகவும், அதனை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தற்போது தண்ணீர் தொட்டி இருந்தும் தண்ணீர் இல்லாத நிலை நீடித்து வருகிறது. இதுவரை எந்த அதிகாரியும் அப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொள்ளவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதே நேரத்தில், அங்கீகாரம் பெறாத சில மனைப்பிரிவுகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கீகரிக்கப்பட்ட பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன எனவும் குடியிருப்போர் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி நிர்வாகமும் உடனடி கவனம் செலுத்தி, ஏழுமலையான் நகர் மேற்கு பகுதியில் குடிநீர், சாலை, கூடுதல் தெருவிளக்கு, மின்கம்பங்கள் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிகளை விரைவாக ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..