“நயினார் நாகேந்திரன் பதவி விலக வேண்டுமா? – இணையத்தில் எழும் கேள்விகள்.!
தமிழகம்: தமிழக அரசியலில் சமீப நாட்களில் அதிகம் பேசப்படும் விவகாரங்களில் ஒன்று நயினார் நாகேந்திரன் பதவி விலகல் கோரிக்கையாகும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில், பாஜக ஆதரவாளர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் இணைய வாசிகள் பலரும் இதுகுறித்து தீவிரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. 27 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், கடந்த தேர்தல்களை ஒப்பிடும்போது பாஜகவின் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது.
இதன் பின்னர், “இந்த தோல்விக்குப் பொறுப்பு யார்?” என்ற விவாதம் சமூக ஊடகங்களில் தீவிரமடைந்தது. அதில் ஒரு பகுதி இணைய வாசிகள், கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்று விலக வேண்டும் என கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனனர்.
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு இருந்த தனிப்பட்ட ஆதரவு வட்டம் இன்னும் சமூக வலைத்தளங்களில் வலுவாக செயல்படுகிறது. இவர்களில் சிலர், “அண்ணாமலை தலைமையில் கட்சி வளர்ச்சி பாதையில் இருந்தது புதிய தலைமையில் வந்த நயினார் நாகேந்திரன் வந்ததால் அந்த வேகம் குறைந்துவிட்டது” என்று குற்றம்சாட்டியுள்ளனர்..
பாஜக “தனித்த அடையாளத்தை இழந்துவிட்டது” என்றும், கூட்டணி அரசியலில் கட்சி பலவீனமடைந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. இதுவே “பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியது சமூக வலைத்தளங்களில் பரவிய போலி அறிக்கைகள்தான். ஆம், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட சில தலைவர்கள் தங்களது பொறுப்புகளில் இருந்து விலகுவதாக போலியாக உருவாக்கப்பட்ட அறிக்கைகள் இணையத்தில் பரவின. பின்னர் தமிழக பாஜக இதை மறுத்து, அது போலியான தகவல் என்று விளக்கம் அளித்தது.
இன்றைய அரசியலில் Facebook, X (Twitter), YouTube போன்ற தளங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. முன்பு கட்சிக்குள் மட்டுமே நடந்த விமர்சனங்கள், இப்போது பொதுமக்கள் முன்னிலையில் திறந்த விவாதமாக மாறிவிடுகின்றன.
அதனால், ஒரு தேர்தல் தோல்வி அல்லது சர்ச்சை ஏற்பட்டாலே “யார் பொறுப்பு ஏற்க வேண்டும்?” என்ற கேள்வி உடனடியாக எழுகிறது.
நயினார் நாகேந்திரன் அவர்களை பதவி விலக வேண்டும் என்று இணைய வாசிகள் கூறுவதற்கான முக்கிய காரணங்கள் தேர்தல் தோல்வி, கட்சிக்குள் இருப்பதாக கூறப்படும் கருத்து வேறுபாடுகள், அண்ணாமலை ஆதரவாளர்களின் அதிருப்தி மற்றும் சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களாகும்.
இறுதியாக, ஒரு தலைவரின் பதவி தொடர வேண்டுமா வேண்டாமா என்பது இணைய விவாதங்களால் மட்டுமல்ல, அவரின் செயல்பாடு, கட்சியின் நிலைப்பாடு மற்றும் மக்களின் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
செய்தியாளர் மு.மணிகண்டன்