தூத்துக்குடி அரசியலில் அதிர்வு: அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு பின்னணி என்ன?

தூத்துக்குடி அரசியலில் அதிர்வு: அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு பின்னணி என்ன?

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் மையங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன.

அனிதா ராதாகிருஷ்ணன் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளை கவனித்து வருகிறார். அதேசமயம், கீதா ஜீவன் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளை பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்திய சட்டமன்ற தேர்தல் முடிவுகள், இந்த நிர்வாகப் பொறுப்புகளின் செயல்திறனை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளன. வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருந்தாலும், முக்கியமான தூத்துக்குடி தொகுதியில் கீதா ஜீவன் தோல்வியை தழுவினார்.

மற்றொரு புறம், தெற்கு மாவட்ட பொறுப்பில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணனின் கட்டுப்பாட்டில் உள்ள ஒட்டப்பிடாரம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் எதிர்பாராத விதமாக “தமிழக வெற்றி கழகம்” வெற்றி பெற்றது. இது அந்த பகுதியில் கட்சியின் நிலைப்பாடு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த சூழ்நிலையில், தேர்தல் தோல்வி மற்றும் வெற்றிகளை தொகுதிவாரியாக ஆராய்வதற்காக 36 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கபட்டுள்ளது. இந்த குழு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அடிப்படை நிர்வாகிகளை நேரில் சந்தித்து கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை சேகரிக்க உள்ளது.

மேலும், இந்த ஆய்வின் அடிப்படையில் மாவட்டச் செயலாளர்களில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற அரசியல் வட்டார தகவல்களும் பரவி வருகின்றன. இதனால், தற்போதைய பதவிகளை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் சில தலைவர்கள் ஊடகங்களில் அதிகமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்ற விமர்சனங்களும் எழுகின்றன.

இந்த நிலையில் தான் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது..

கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், தற்போதைய ஆட்சி இன்னும் நான்கு மாதங்களே நீடிக்கும் என்றும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு சவால் விடுத்த அவர், “நீங்கள் உங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து திருச்செந்தூரில் போட்டியிடுங்கள்; நானும் போட்டியிடுகிறேன், யார் வெற்றி பெறுகிறார்கள் பார்ப்போம்” என தெரிவித்தார்.

மேலும், மு.க. ஸ்டாலின் குறித்து பேசிய அவர், கொளத்தூர் தொகுதியை சிங்கப்பூர் போல மாற்றியிருந்தார் என்றாலும், அங்குள்ள மக்களை விமர்சித்தார். 

மேலும், தமிழகத்தில் லாட்டரி மீண்டும் வர முயற்சி செய்யப்படுவதாகவும், அத்துடன், உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியதை எடுத்துக்காட்டி, தற்போதைய முதல்வரை விமர்சித்தார். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் வைரல் ஆனது..

அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையை மையமாகக் கொண்டு பார்க்கும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த தேர்தல் அதிர்வுகள் சாதாரண அரசியல் ஏற்றத் தாழ்வுகளாக அல்லாமல், ஒரு முக்கியமான எச்சரிக்கையாகவே கருதப்பட வேண்டும். அவரது கட்டுப்பாட்டில் உள்ள தொகுதிகளில் ஏற்பட்ட எதிர்பாராத பின்னடைவு, அமைப்பு வலிமை மற்றும் தரை மட்ட அரசியல் அணுகுமுறையில் மாற்றம் தேவை என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.

ஊடகங்களில் வெளிப்படும் கருத்துக்கள் அல்லது சவால்கள் தற்காலிக கவனத்தை ஈர்க்கலாம்; ஆனால் நிலையான அரசியல் நிலைப்பாட்டை உருவாக்குவது அடிப்படை அமைப்பை மறுசீரமைப்பதில்தான் இருக்கிறது.

வரவிருக்கும் ஆய்வுக்குழு முடிவுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் அமைப்பு மாற்றங்கள், அவரது அரசியல் பயணத்திற்கும், மாவட்டத்தில் கட்சியின் எதிர்காலத்திற்கும் திசை நிர்ணயமாக அமையுமா? இந்த சவாலை வாய்ப்பாக மாற்றி, தரை மட்டத்தில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா? என்பது தான் கவனிக்க வேண்டிய முக்கியக் கேள்வியாக உள்ளது.

வரவிருக்கும் நாட்களில் இந்த ஆய்வு குழுவின் முடிவுகள், மாவட்ட அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..