தூத்துக்குடி: வாடகை இடம் அபகரிப்பு முயற்சி – 83 வயது முதியவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.!
தூத்துக்குடி: வாடகை இடம் அபகரிப்பு முயற்சி – 83 வயது முதியவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
தூத்துக்குடி, சின்னமணி நகர் பகுதியைச் சேர்ந்த 83 வயது முதியவர் வேல் நாடார், தாம் வாடகைக்கு விட்ட இடத்தை போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக குற்றம்சாட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வேல் நாடார் தனது பேத்தி கிருஷ்ணவேணியுடன் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணவேணி, கடந்த 60 ஆண்டுகளாக சின்னமணி நகரில் வசித்து வருகிறோம். அப்பகுதியில் ரெட்டை பாலம் எதிரே மூன்று கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருந்ததாகவும், அவற்றில் ஒன்றை தங்கராஜ்–ஆனந்தராஜ் சகோதரர்களுக்கு வாடகைக்கு வழங்கியிருந்ததாகவும் கூறினார்.
இந்நிலையில், அந்த இடத்தை விற்க முயன்றபோது, போலியான ஆவணங்கள் தயாரித்து இடத்தை அபகரிக்க முயற்சி செய்யப்பட்டதாக தெரிந்ததால், அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, தீர்ப்பு வேல் நாடார் தரப்புக்கு சாதகமாக வந்தது. அதன் அடிப்படையில் அமீன் மூலம் கடை காலி செய்யப்பட்டது.
ஆனால், வேல் நாடார் உடல்நலக்குறைவால் சென்னை சென்று சிகிச்சை பெற்று வந்ததை பயன்படுத்தி, தங்கராஜ் மற்றும் ஆனந்தராஜ் மீண்டும் கடையை திறந்து நடத்தத் தொடங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இடத்தில் இருந்த தகரச் சுவர் மற்றும் வேலிகளை அகற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கிலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வேல் நாடார் தரப்புக்கு சாதகமாக வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, இடத்தை காலி செய்து ஒப்படைக்கக் கோரி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் பப்ளிக் பிராசிக்யூட்டர் கருத்தை பெறுமாறு கூறியதாகவும், அதன்படி அந்த இடம் வேல் நாடாருக்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தும் ஆவணங்கள் பெறப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், இடத்திற்கான வரி மற்றும் தண்ணீர் கட்டணங்களை செலுத்தியபோதும் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்காமல் இருந்ததுடன், மாறாக அவர்கள்மீதே வழக்கு பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
தாங்கள் அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளதாக கிருஷ்ணவேணி தெரிவித்தார்.
செய்தியாளர் மு.மணிகண்டன்