திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார யாகம்: விஜயின் வேண்டுதல் – அரசியல் வெற்றிக்கு வழி வகுக்குமா?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக சிறப்பிடம் பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இத்தலம், திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பெரும் திரளான பக்தர்களை ஈர்க்கும் ஆன்மிக மையமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் நடிகரான விஜய் இன்று அதிகாலை கோவிலுக்கு வருகை தந்து, குகை சன்னதியில் “சத்ரு சம்ஹார யாகம்” நடத்தினார். அரசியல் மற்றும் தொழில் துறையில் ஈடுபட்டவர்களிடையே இந்த யாகம் நடத்துவது ஒரு வழக்கமாக மாறி வருகிறது.
“சத்ரு சம்ஹார யாகம்” என்பது எதிரிகள், தீய சக்திகள், வழக்குத் தொல்லைகள் மற்றும் நோய்களிலிருந்து விடுபட உதவும் சக்திவாய்ந்த பூஜையாக கருதப்படுகிறது. மேலும், மன உறுதி, தைரியம் மற்றும் வெற்றியை வழங்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. கடன் சுமைகள் குறைதல், தொழில் நஷ்டம் நீங்குதல், செவ்வாய் தோஷ நிவர்த்தி போன்ற பல நன்மைகளும் இதன் மூலம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில் தான் விஜய் இந்த யாகத்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து, விஜய் மூலவர் சுப்பிரமணியர் சன்னதியில் தரையில் அமர்ந்து தீவிரமாக பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பெருமாள் மற்றும் சூரசம்கார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் மேற்கொண்டார்.
அரசியல்வாதிகள் மத்தியில், இத்தகைய பூஜைகள் அரசியல் எதிரிகளை வென்று தேர்தலில் வெற்றி பெற உதவும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. இதனால், விஜய் மேற்கொண்ட இந்த சத்ரு சம்ஹார யாகம் அவரது அரசியல் பயணத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.
ஆனால், இந்த ஆன்மிக முயற்சி அரசியல் வெற்றியாக மாறுமா என்பது காலத்தின் போக்கில் தான் தெளிவாகும். விஜயின் இந்த நடவடிக்கை அவரது அரசியல் எதிர்காலத்தில் எந்த மாற்றத்தை கொண்டு வரும் என்பது குறித்து அனைவரும் எதிர்பார்த்து கவனித்து வருகின்றனர்.
செய்தியாளர் மு.மணிகண்டன்