கனிமொழியை கடுமையாக சாடிய ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் சுந்தரராஜ்.!

கனிமொழியை கடுமையாக சாடிய ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் சுந்தரராஜ்.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சுந்தரராஜ், கடந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியில் ஏற்பட்ட பிளவில் சசிகலா – டி.டி.வி. தினகரன் அணியுடன் இணைந்ததால், அவர் தனது எம்எல்ஏ பதவியை இழந்தார்.

தற்போது நடைபெறும் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், “குக்கர்” சின்னத்தில் சுந்தரராஜ் மீண்டும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதற்காக அவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தேர்தல் பறக்கும் படையினர், வருமானவரித்துறையினர் வருகை தந்து வீட்டில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில், 7 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் 27 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..

அதாவது, 6 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மற்றும் வேறு ஒரு பையில் இருந்த ரூ.14 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மொத்தமாக சேர்த்து 48 லட்சத்து 3 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..

ஆனால், வீட்டில் கைப்பற்றப்பட்ட 27 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு வேட்பாளர் தரப்பில் கணக்கு வைத்துள்ளனர். ஆனால், வீட்டிற்கு வெளியே இருந்த 20 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் எங்கள் பணம் கிடையாது என்று வேட்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேட்பாளர் சுந்தரராஜ் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காலை பிரச்சாரத்திற்கு செல்ல விடாமல் காவல்துறை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தது. பின்னர் வீட்டையும் சோதனை செய்ய வேண்டும் என கூறினர். தவறான தகவலை அடிப்படையாக கொண்டு தேர்தல் பறக்கும் படையினர் கொண்டு வரப்பட்டனர். திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பணம் வழங்கப்படுவதை புறக்கணித்து, என்னை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தாம் பணக்கார வேட்பாளர் அல்ல பொதுமக்களை நம்பி அரசியல் செய்பவன். “மக்களை சந்தித்து அவர்களின் ஆதரவை நம்பியே களத்தில் இருக்கிறேன். ஆனால், 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நிலை ஏற்பட்டதால், அதைத் தடுக்க முயற்சி நடக்கிறது. தனது மகன் வீட்டிலிருந்து 27 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

டிஎஸ்பிகள் வேகமாக வந்து, வீட்டின் அருகே இருந்த ஒரு மூட்டையை போலீசார் எடுத்துச் சென்றனர். அது எவ்வாறு வந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த சம்பவம் தமக்கு அவமானத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பொறுப்பானவர்கள் யார்? “அரசு மற்றும் அதிகாரிகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அதிகாரிகளை தூண்டியவர்கள் யார் என்பதும் வெளிச்சத்துக்கு வர வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், “திமுகவினர் வெளிப்படையாக பணம் வழங்குகின்றனர் என்று பொதுமக்கள் பேசுகின்றனர். இதை காவல்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் ஏன் கவனிக்கவில்லை? இதுகுறித்து நாங்கள் போலீசாரிடம் தகவல் அளித்தும் நடவடிக்கை இல்லை. தனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் எந்த குற்றவியல் வழக்கும் இல்லை, “என் மீது ஒரு குற்றச்சாட்டு இருந்தால் அரசியலை விட்டு விலக தயார்.

அதேபோல், கனிமொழி குறித்து பேசும்போது, “என் வீட்டில் பணம் இருப்பதாக அவர் எவ்வாறு கூறுகிறார்? அவர் எனக்கு பணம் கொடுத்தாரா? மேடைகளில் தவறான தகவல்களை பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதிகார துஷ்பிரயோகம் நடக்கிறது,” என குற்றம்சாட்டினார்.

மேலும், “திருட்டுத்தனமாக மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க முடியுமா? கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியுமா? இவற்றை விட்டுவிட்டு என்னை குறிவைத்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளம் விதவைகள் இருக்கமாட்டார்கள் என்று கூறியவர், தற்போது வேறு விதமாக பேசுகிறார். மாற்றி மாற்றி பேசி மக்களை குழப்புவதே அவர் வேளை.

எங்களைப் போன்றவர்கள் ஊழல்வாதிகள் அல்ல. 2ஜி வழக்கில் பெரிய குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் எங்களை குற்றம் சொல்வது பொருந்தாது. என் வீட்டிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல. இதற்குப் பொறுப்பேற்க யார் தயாராக உள்ளனர்?

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தனது தேர்தல் வெற்றியை தடுக்க திட்டமிட்ட சதியாகும் என்றும், தவறான தகவல்களை பரப்பி தனது நற்பெயரை குலைக்க முயற்சி நடக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.