திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. இதையடுத்து சுவாமி, அம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரத்தைத் தொடா்ந்து, அக். 31-ஆம் தேதி நள்ளிரவு சுவாமி குமரவிடங்கப்பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. நவ. 1-ஆம் தேதி சுவாமி, அம்மன் பட்டணப் பிரவேசமும், நவ. 2, 3, 4 ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது.
திருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை, கோயிலில் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. இதையடுத்து சுவாமி, அம்மன் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.அருள்முருகன், இணை ஆணையா் (கூடுதல் பொறுப்பு) ம.அன்புமணி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.