திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலை திருப்பதிக்கு இணையாக மேம்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலை திருப்பதிக்கு இணையாக மேம்படுத்துவதற்காக, இந்து சமய அறநிலையத்துறையும், எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து 300 கோடி ரூபாய் செலவில் மெகா மேமம்பாட்டு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் விடுதிகள், குளியலறை, கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் அற்புதமாக செய்யப்பட்டுள்ளன. பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்வார்கள். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதியிலும் திருமலையிலும் தங்கும் விடுதிகள் கிடைக்காதவர்களுக்கு லாக்கர் வசதியுடன் கூடிய இடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதான வசதியும் கோவிலில் செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தமிழகத்திலும் இதே போல கோவில்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழாமல் இருக்காது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடாகும். அகத்தியர், அப்பர் சுவாமிகள், அருணகிரிநாதர், ஆதிசங்கரர், பகழிக்கூத்தர், குமரகுருபரர் ஆகியோரால் பாடல்பெற்ற, தொன்மையான தலம் இதுவாகும்.
இந்த ஆலயத்தில் தமிழக அரசு மற்றும் பிரபல சாப்ட்வேர் நிறுவன உரிமையாளரான எச். சி. எல். சிவ் நாடார் சார்பில் 300 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்செந்தூர் கோயிலுக்கு நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரிப்பதால், திருப்பதி கோயிலுக்கு இணையாக க்யூ கம்ப்ளக்ஸ் (Queue complex) ஒன்றுகட்டி, அதன் வழியாக படிப்படியாக பக்தர்களை அனுப்பும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். ஒரே நேரத்தில் 5000 பேர் வந்தால்கூட சமாளிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். அதன்படி இந்த ஆலயத்தில் தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 2021-22-ம் ஆண்டு அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் ‘திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.150 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, கோயிலில் திருப்பணிகள் மற்றும் இதர பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ரூ.200 கோடியில் கோயில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வறை அமைத்தல், பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை, தீத்தடுப்பு கண்காணிப்பு, முடி காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக் கூடம், கோயில் வளாகத்தில் சாலை வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், கோயில் நிதி ரூ.100 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, சலவைக் கூடம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்புக் கட்டிடம், பணியாளர் குடியிருப்பு, கோயிலின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் அன்னதானக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பணிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
மொத்தம் ரூ.300 கோடி மதிப்பிலான திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அறநிலையத் துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவில் திருப்பணி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். திருத்தணி, ராமேஸ்வரம், பழனி மற்றும் சமயபுரம் உள்ளிட்ட திருக்கோயில்களும் முக்கியத்துவம் பெறும் வகையில், பல்வேறு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.