திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார திருவிழாவிற்கு பக்தர்கள் வந்துசெல்ல ஏதுவாக “திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையை துரிதமாக சீரமைத்திடவேண்டும்”என புதிய தமிழகம் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மற்றும் “சூரசம்ஹாரத்திற்கு இயக்கப்படும் சிறப்புப்பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்ககூடாது” என்றும் மனுவில் கூறியுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுறுப்பதாவது; திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார திருவிழா வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வருடத்திற்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார திருவிழா வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த முருகபக்தர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொள்வது வாடிக்கையாகும்.
இந்நிலையில், கயத்தார், அம்பை, பாபநாசம், தென்காசி, கடையம், சங்கரன்கோவில், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முருகபக்தர்கள் திருநெல்வேலி வழியாகவே திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கமாகும். ஆனால், தற்போது திருநெல்வேலி முதல் திருச்செந்தூர் வரையில் புதியதாக சாலை அமைக்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த புதிய சாலை அமைக்கும் பணிகள் செய்துங்கநல்லூர், கருங்குளம் மற்றும் ஆழ்வார்திருநகரி, குரும்பூர், அம்மன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் முடிவடையாமலே இருந்து வருகிறது. குறிப்பாக ஆழ்வார்திருநகரி முதல் திருச்செந்தூர் கோவில் நுழைவுவாயில் வரையில் புதிய சாலை அமைக்கும் பணிகள் முடிவடையாமல் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.
சூரசம்ஹார திருவிழாவிற்கு இந்த குண்டும் குழியுமான வெறும் கற்கள் நிறைந்த சாலை வழியாகத்தான் வாகனங்கள் சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்த்திட மோசமான இந்த சாலைகளில் புழுதி பறந்திடாத வகையில் எம்சான்ட் மண் அடித்து தற்காலிகமாக சாலையை சீரமைத்து வாகனங்கள் சீராக சென்று வர வழிவகை செய்திடவேண்டும் எனவும்
மேலும், சூரசம்ஹார திருவிழாவிற்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் சிறப்புப்பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகளில் வெளியூர்களில் இருந்து குடும்பத்தினருடன் வந்து செல்லும் முருக பக்தர்கள் பயன்பெறும் வகையில் அரசின் சிறப்புப்பேருந்துகள் அனைத்திலும் கூடுதல் கட்டணங்கள் ஏதுமின்றி எப்போதும்போன்று சாதாரணமான கட்டணமே வசூலித்திடவேண்டும்.
சூரசம்ஹாரத்திற்காக சுமார் 10லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கூடும் திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்களுக்கு முக்கியத்தேவையான குடிநீர், கழிவறை மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகமும், இந்துசமய அறநிலையத்துறையும் துரிதமாக செய்துகொடுத்திடவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் முருகபக்தர்கள் சார்பில் வழக்கறிஞர் கனகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.