தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் தேசியக்கொடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி நேற்று (ஆக 8), செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில், முதல் விற்பனையை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; தூத்துக்குடி அஞ்சலக கோட்டத்தில் 3 தலைமை அஞ்சல் நிலையங்களும், 75 அஞ்சல் நிலையங்களும், 215 கிராம அஞ்சல் நிலையங்களும் உள்ளன. தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து அஞ்சலகங்களிலும் தேசியக் கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை வரும் 14ஆம் தேதி வரை நடைபெறும். ஒரு கொடியின் விலை ரூ.25 ஆகும். இந்த அஞ்சல் கோட்டத்தில் சுமார் 50ஆயிரம் தேசியக் கொடி வரை விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப அனைத்து அஞ்சலகங்களுக்கும் தேசியக்கொடி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில் வரும் 11 ஆம்தேதி நடைபெறவுள்ளது. இதில், தலைமை அஞ்சலக அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றார்.
நிகழ்வில், அஞ்சலக உதவி கோட்டக் கண்காணிப்பாளர் வசந்தா சிந்து தேவி, தலைமை அஞ்சலக அதிகாரி ராஜா, வணிக நிர்வாக அலுவலர் பொன்ராம்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.