தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ளது வேலன்புதுக்குளம் கிராமம்.. இங்கு 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து ரேஷன் பொருட்களை வாங்க இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்லும் அவல நிலை இருந்து வந்துள்ளது. மேலும், இந்த கிராமத்தில் உள்ள பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், உடனடியாக பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கடந்த மாதம் சமாதான கூட்டம் நடந்தது. அதில் அந்த பகுதிக்கு நகரும் ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைவேற்றி தரப்படும் என வட்டாட்சியர் உறுதி அளித்திருந்தார். ஆனால் ஒரு மாத காலம் கடந்தும் இதுவரை நகரும் ரேஷன் கடை அமைக்கப்படவில்லை.
எனவே இதனை கண்டித்து இன்று சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென கூடினர்.. பின்னர், அந்த கிராம மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தங்களின் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வீசி தங்களது ரேஷன் கார்டை அரசிடம் திரும்ப ஒப்படைப்பதாக கூறி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் அருகே ரேஷன் பொருட்கள் வழங்காததால் பொதுமக்கள் திடீரென வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.