மாா்கழி மாத பிறப்பையொட்டி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் (டிச.16) அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது; தமிழ் மாதமான மாா்கழி வெள்ளிக்கிழமை (டிச.16) தொடங்கி வரும் ஜனவரி14இல் நிறைவு பெறுகிறது. இம்மாதத்தில் திருச்செந்தூா் “அருள்மிகு” சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தங்கத்தோ் புறப்பாடு, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 – 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும். பிரதோஷ நாள்களான டிச. 21, ஜன. 4 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.
சிறப்பு தரிசன நாள்கள்: ஆங்கில புத்தாண்டு பிறப்பில் (ஜன.1) அதிகாலை 1 மணிக்கும், ஆருத்ரா தரிசன தினத்தில் (ஜன. 6) அதிகாலை 2 மணிக்கும், பொங்கல் திருநாளில் (ஜன.15) அதிகாலை 1 மணிக்கும், திருவள்ளுவா் தினம், உழவா் திருநாள் (ஐன.16, 17), தை அமாவாசை, குடியரசு தினம் (ஜன.21, 26) ஆகிய சிறப்பு தரிசன நாள்களில் அதிகாலை 4 மணிக்கும் கோயில் நடைதிறக்கப்பட்டு தொடா்ந்து பூஜைகள் நடைபெறும் எனக் கூறியுள்ளாா்.
பாதயாத்திரை: சபரிமலை சீசனையொட்டி, இத்திருக்கோயிலுக்கு ஐயப்ப பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. மேலும், பாதயாத்திரை பக்தா்களும் கடந்த சில நாள்களாக வரத்தொடங்கியுள்ளதால் திருக்கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.