தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தில் பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்த இந்த போட்டியில் பள்ளி மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டியினை, தூத்துக்குடி உமா ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர்கள் சரவணராஜா மற்றும் ராம்குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மிினி மாரத்தான் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களை காட்டுநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கனகலட்சுமி, சங்கீதா, மற்றும் மகாலட்சுமி ஆகியோர் பிடித்தனர். ஆண்களுக்கான பிரிவில் முதல் மூன்று இடங்களை பசுபதி, அஜித்குமார் மற்றும் பார்வதி நாதன் ஆகியோர் பிடித்தனர்.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில், ஶ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி மாயவன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கி பேசினார். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு உமா ஜுவல்லர்ஸ் சார்பில் தந்த நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. ஈசி பிட்னஸ் பயிற்சியாளர் இம்மானுவேல் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினர்களாக, தொழிலதிபர்கள் பரமேஸ்வரன், ஜெபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் செயல் விளக்க காட்சிகளாக போதை இல்லாத வாழ்க்கை வாழ்ந்தால் உடல் வலிமையுடனும், மனவலிமையுடனும் வாழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக 63 வயது பயிற்சியாளர் இம்மானுவேல் வயிற்றில் 77 வது சுதந்திர தின விழாவை நினைவு கூறும் விதமாக
77 முறை இளைஞர்கள் ஏறி மிதித்து சென்றனர். தொடர்ந்து கராத்தே மாஸ்டர் ஜெயக்குமார் தனது வயிற்றில் வைத்து ஒன்பது பாறாங்கற்களை சம்மட்டியால் உடைத்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ், ட்ராவல் பேக் மற்றும் டி-ஷர்ட் வழங்கப்பட்டது.
முடிவில் ஜெபதிலகர் நன்றி கூறினார்.
பின்னர், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி பரிசுகளை வழங்கினார்.