தூத்துக்குடியை சேர்ந்த முகைதீன் என்பவர் 15.6.2003 அன்று விபத்து காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு, மூச்சு விட மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதனால் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், அவருக்கு கழுத்துப் பகுதியில் உள்ள முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் செயல் இழந்த நிலையில் இருந்தது. மேலும், தண்டுவடமும் கடுமையாக பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. பின்னர், அவரை மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் குழுவினர், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அதன் மூலமாக அவருடைய உயிர் காப்பாற்றப்பட்டது.
இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ராஜா கூறுகையில், இந்த சிகிச்சையின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய இரண்டு கை மற்றும் இரண்டு கால்கள் உணர்ச்சியும், அசைவும் பெறப்பட்டது. பிசியோதெரபி மூலமாக அவர் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு தற்சமயம் இரண்டு கைகள் அசைக்கவும் மெதுவாக நடக்கவும் செய்கிறார். இந்த அறுவை சிகிச்சையானது, முன்பகுதி, பின்பகுதி என சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட லெக்டர் வேண்டிலேட்டார், பிசியோதரபி முலம் செய்த சிகிச்சையாகும். இந்த சிகிச்சையானது, தனியார் மருத்துவமனையில் 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை செலவாகும். ஆனால் இந்த சிகிச்சையானது, முதல் முறையாக, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் இலவசமாக செய்து சாதனை படைத்துள்ளனர். மேலும், நோயாளி 8 மாதத்தில் முழுமையாக முன்னேற்றம் அடைந்து பழைய நிலைக்கு திரும்புவதாக அவர் தெரிவித்தார்.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்.கணபதி வேல் ராமன், டாக்டர் ராஜா விக்னேஷ், டாக்டர் சொக்கையா ராஜா ஆகியோரை கல்லூரி முதல்வர் சிவக்குமார் பாராட்டினார். இதற்கு மயக்க மருந்து செலுத்தக்கூடிய ஒரு குழுவும் உறுதுணையாக இருந்தது. துறைத்தலைவர் மனோரமா டாக்டர் பலராமகிருஷ்ணன் டாக்டர் சுமதி ஆகியோர் அடங்கிய குழு அறுவை சிகிச்சை செய்வதில் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.