இந்தியாவில் தற்போது ஆன்ராய்டு செல்போன் வருகையாலும், ஆதார் எண்களாலும் தற்போது அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியை மையப்படுத்தி தயரிக்கப்பட்டு உள்ள ‘கருப்பு பக்கம்’ என்ற திரைப்படம் நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் பல திரையரங்கில் வெளியானது. அரசியல் சதுரங்கம், விதி எண் 3 ஆகிய திரைப்படங்களை தயாரித்த பிராட்வே பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளது. தணிக்கை துறையின் U சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் திரையிடப்பட்ட முதல் நாளான நேற்று பகல் காட்சியை காண்பதற்காக, தூத்துக்குடி “ஸ்ரீபாலகிருஷ்ணா” திரையரங்கில் கூட்டம் அலைமோதியது. இதனால், டிக்கெட் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்நிலையில், ‘கருப்பு பக்கம்’ திரைப்படத்தின் முதல் காட்சியை இயக்குனர் பிராட்வே சுந்தர், கதாநாயகி சின்சி, கதாநாயகன் ராஜ்கபூர், நகைச்சுவை நடிகர் சுமங்கலி சதீஷ், வில்லன் நடிகர் கொல்லம் கோபி, சீலன், மற்றும் இப்படத்தில் நடித்துள்ள வக்கீல் செங்குட்டுவன், தொழில் அதிபர் வி.பி.எம்., சுகந்தி கோமஸ், சுசீலா, ஜான் சிங்கராயன், கோல்டு சின்னா, ஜெகதீஸ், ராஜேந்திரபூபதி, ராமசாமி அய்யர், அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து கண்டுகளித்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்ரீபாலகிருஷ்ணா திரையரங்கில் 2-வது நாளாக இன்றும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், இன்றும் டிக்கெட் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.